;
Athirady Tamil News

வீட்டில் சித்ரவதை செய்வதாக வாட்ஸ்-அப்பில் கதறிய இளம்பெண் மர்மமரணம்: காதல் கணவன் கைது..!! (VIDEO)

0

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவரது மனைவி சத்யா (27). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய சம்பத் இங்கு பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் 25-ந் தேதி மாலை வீட்டில் மர்மமான முறையில் சத்யா பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் சம்பத் குடும்பத்தினர் கூறினர்.

இதையடுத்து நாட்டறம் பள்ளி போலீசார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், சத்யா இறப்பதற்கு முன்பு யாரிடமோ செல்போன் வாங்கி கதறி அழுதபடி எடுத்த வீடியோ பதிவு வாட்ஸ்- அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் சத்யா கதறி அழுதபடியே பேசியதாவது:- தயவு செஞ்சு இந்த வீடியோ பார்க்குற யாராவது எனக்கு உதவி பண்ணுங்க. இதை பார்க்கிற யாருக்காச்சும் என்ன மாதிரி அக்காவோ, தங்கச்சியோ, பொண்ணோ இருப்பாங்க. என்னை கட்டிக்கினு வந்தவன் என்னை ரொம்ப கொடுமை பண்றான்.

எனக்கு உதவி செய்றதுக்கு அப்பாவோ, கூட பிறந்தவனோ இல்லை. நான் சின்ன வயசாக இருந்தப்பவே என்னுடைய அப்பா செத்து போயிட்டார்.

அதனால் இதை பார்க்கிறவங்க என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்துங்க. அம்மா மட்டும்தான். எங்க அம்மா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. இவன நம்பி வந்தேன். இவன் என்னை வீட்டுக்குள்ள தனி அறையில் அடைச்சி வச்சி சோறு தண்ணி இல்லாம ரொம்ப கொடுமை செய்றான்.

நானும் போலீஸ் ஸ்டே‌ஷனுக்கு எத்தனையோ முறை போனேன். என்னை சமாதானம் பண்ணி அவன் கூடவே அனுப்பி வைச்சிட்டாங்க. இவன் கொடுமையை தாளாம எங்கயாவது போயிடலாம்னு நினைச்சா, யாரு கூடவோ ஓடி போய்ட்டேன்னு அசிங்கப்படுத்தி சொல்லுவேன்னு சொல்றான். கொலை செய்துடுவேன்னு மிரட்டறான்.

நான் இங்க இருந்து போனாலும் நல்ல பேரோடு போகணும். இதை வைச்சி தினமும் என்னையும் என் பிள்ளையையும் அடிச்சி சித்ரவதை பண்றான். ரொம்ப கேவலமா பேசறான். ஒரு நாளும் என்னை பொண்ணா மதிக்கல. நான் வாழணும்னு நெனைக்கிறேன்.

எனக்காக இல்ல, என் பையனுக்காக வாழணும்னு நெனக்கிறேன். இவன் கொடுமையை தாள முடியல. எனக்கு இந்த வீட்டில் இருந்து விடுதலை வாங்கி தாங்க. என்னையும், என் மகனையும் யாராவது காப்பாத்துங்க இவ்வாறு கண்ணீர் மல்க கூறும் சத்யா, போனை கொடுத்தவரிடம் இதுபோதும் என்று கூறுகிறார்.

வீடியோ காட்சியில் அவரது முகம், கை, கால்களில் ரத்தக் காயங்களும், ரத்தம் வழிந்த அடையாளங்களும் உள்ளன.

இந்த வீடியோ வைரலாக பரவியதால், அவரது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரே சத்யாவை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடி வழக்கை திசை திருப்பினார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

சத்யாவின் தாய் செல்வி கூறுகையில், தனது மகள் மகனுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. சாவில் சந்தேகம் உள்ளது. அவளை கொலை செய்திருக்கலாம் என்று நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீசார் சத்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை மாற்றி காதல் கணவரான சம்பத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 13 =

*