;
Athirady Tamil News

கார்த்தி சிதம்பரத்திற்கு ஒரு நாள் விசாரணைக்காவல் – சி.பி.ஐ கோர்ட் அனுமதி..!!

0

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் டெல்லியில் உள்ள அலுவலகங்களில் கடந்த மாதம் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலைய வளாகத்திலேயே சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சி.பி.ஐ தலைமையகத்தில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் கைதான தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் உள்ள ப.சிதம்பரம் இந்தியா விரைந்துள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் தாயர் நளினி சிதம்பரமும் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றார்.

பின்னர், மாலை 5 மணியளவில் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கார்த்தி சிதம்பரத்திடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. எனவே, 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லாத நிலையில் இன்று அதிகாலை முதல் சுமார் 22 மணி நேரம் சி.பி.ஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது. இதை அடுத்து, போலீசார் அவரை வாகனத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + fourteen =

*