;
Athirady Tamil News

போலி வைத்தியர்களிடம் எச்சரிக்கையாய் இருக்குமாறு மருத்துவர் சங்கம் கோரிக்கை…!!

0

போலி வைத்தியர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அரச மருத்துவர் சங்கத்தின் வவுனியா கிளை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது……

சிறிது காலத்திற்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதனையொட்டி எழுந்த மக்கள் குரலிலே அவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்படுவதுடன் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுவும் கோரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தது.

மக்களுடைய இந்தக்குரலினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளை ஏற்றுக்கொண்டு வவுனியா மாவட்டத்தில் சட்ட விரோதமாக வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் விபரங்களைத் திரட்டி உரிய அதிகாரிகளிடம் அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் இவர்களது வைத்திய சிகிச்சை நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதனைத் தடுக்க இது தொடர்பான தெளிவுபடுத்தலை இந்த ஊடக அறிக்கை மூலம் மேற்கொள்கிறது.

சட்டவிரோத வைத்திய நடவடிக்கைகள் என்பதற்குள் பின்வரும் நடவடிக்கைகள் அடங்குகின்றன. 1.எந்தவிதமான தகுதியும் மருத்துவ சபையின் பதிவும் இன்றி மருத்துவம் பார்ப்பவர்கள்.

2.வெளிநாட்டில் மருத்துவம் கற்ற பின்னர் இலங்கையில் பரீட்சைக்குத் தோற்றி இலங்கை மருத்துவ சபையின் பதிவினைப் பெற்றுக்கொள்ளாது மருத்துவம் பார்ப்பவர்கள்.

3.சித்த ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் மேலைத்தேய (அலோபதி) மருத்துவத்திற்குரிய மருந்துகளைக் கொண்டு மருத்துவம் பார்த்தல்.

4.மேலைத்தேய மருத்துவ முறைக்குப் பட்டம் பெற்றவர்கள் சித்த ஆயுர்வேத பாரம்பரிய மருந்துகளைக் கொண்டு மருத்துவம் பார்த்தல்.

மேற்குறித்த வகைகளில் அடங்கக்கூடியதாக பன்னிரண்டுக்கும் மேற்பட்ட தனிநபர்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியாக் கிளை அடையாளம் கண்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரப்பகுதி, குடியிருப்பு, இரண்டாம் குறுக்குத்தெரு, கோவில்குளம், சிதம்பரபுரம், தோணிக்கல், பூந்தோட்டம், குருமன்காடு, பட்டைகாடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மருத்துவ நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெறுவதாக ஆதாரங்கள் கிடைக்கபெற்றுள்ளன.

MBBS, MD போன்ற பட்டங்களுடன் SLMC பதிவு இலக்கமொன்றைக் காண்பித்து இருக்கும் வைத்தியர்களும் RMP என்று குறிப்பிட்டு SLMC பதிவிலக்கத்தைக் குறிப்பிட்டு இருப்பவர்களும் மேலைத்தேய அலோபதி சிகிச்சை முறைகளை (ஆங்கில மருத்துவம்) செய்வதற்குத் தகுதி பெற்றவர்கள்.

BSMS போன்ற பட்டங்கள் பெற்றவர்களும RAM, DAM, RIMP போன்ற பதிவுகளைக் கொண்டிருப்பவர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளைச் செய்வதற்குத் தகுதி பெற்றவர்கள்.

தனியார் வைத்திய நிலையமொன்றின் மூலம் சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு வைத்தியரும் தங்களது தகமை மற்றும் பதிவுச் சான்றிதழை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.

இப்படியான சட்டவிரோத சிகிச்சை முறைகள் மூலம் ஏற்கனவே அதிகரித்த நிலையில் உள்ள சிறுநீரக நோய்கள் மேலும் தீவிரமடைவதுடன் கிருமிகொல்லி மருந்துகள் செயற்படாமல் போகும் தன்மை என்பன ஏற்படும்.

அத்துடன் சட்டவிரோத கருக்கலைப்பு முறையற்ற சிகிச்சைகளால் உயிரிழப்பு என்பனவும் ஏற்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்கள் தாங்கள் சிகிச்சை பெறச்செல்லும் வைத்தியரின் தகமை பற்றியும் அவர் வழங்கும் மருந்துகள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

முறையற்ற சிகிச்சை நடவடிக்களை இனம்கண்டால் உரிய அதிகாரிகளிடம் (சுகாதார மருத்துவ அதிகாரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்) உடனடியாகக் கடிதம் மூலம் முறையிடுவது உடனடி நடவடிக்கைள் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 2 =

*