;
Athirady Tamil News

முல்லைத்தீவில் மக்கள் போராட்டங்களை முடக்க பொலிஸார் தீவிர நடவடிக்கைகள்…!!

0

முல்லைத்தீவில் மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முடக்க பொலிசார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலங்களில் கடத்தல், கொலைகள் என அச்சுறுத்தப்பட்டது. இப்போது நல்லாட்சி என்ற இந்த அரசில் புதிய உத்தியாக பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களால் தந்திரமாக அச்சுறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நேரடியாக இராணுவம் மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் இல்லையே தவிர அச்சுறுத்தல் புதுவடிவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பித்த நிலையில், போராட்டங்களை முடக்க பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களால் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கேப்பாபுலவு மக்களது காணி விடுவிப்பு போராட்டத்தை முடக்க பொலிசார் கேப்பாபுலவு மக்களை இரண்டு தடவை நீதிமன்றின் வழக்கு தாக்கல் செய்தனர்.

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற வட்டுவாகல் காணி அளவீட்டு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது கலகம் அடக்கும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டனர். அதன் பின்னர் 26ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது நடைபெற்ற மக்கள் போராட்டங்களை முடக்க வீதித்தடைகள் மற்றும் போலீசாரை குவித்திருந்தனர்.

அதன் பின்னர் வட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்தமை, நீதிமன்றில் நிறுத்தியமை மற்றும் இன்றையதினம் இடம்பெற்ற கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பின் ஓராண்டு நிறைவு போராட்டம் போன்றவற்றில் பொலிஸார் தீவிரமாக கவனம் செலுத்தி இருந்தனர்.

இவ்வாறு மக்கள் போராட்டங்களை முடக்க பொலிசார் செயற்படுவது போன்று புலனாய்வாளர்கள் போராட்ட இடங்களுக்கு அண்மையில் முழு நாளாக தரித்து நிற்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − three =

*