;
Athirady Tamil News

செம்மரம் வெட்ட சென்றதாக ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது- லாரியில் அடைத்து சித்ரவதை..!! (வீடியோ)

0

ஆந்திர மாநிலம் சேஷாசலம், கடப்பா வனப்பகுதிகளில் செம்மரங்கள் செழித்தோங்கி வளர்ந்துள்ளன. வெளிநாடுகளில் இந்த செம்மரங்களுக்கு அதிக மவுசு உள்ளது.

இதனால் செம்மரங்களை வெட்டிக் கடத்தி வருகிறார்கள். செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர மாநில போலீசார் சிறப்பு காவல் படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் கடத்த வந்ததாக வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் தமிழக தொழிலாளர்கள் 5 பேர் மர்மமான முறையில் கடப்பா ஏரியில் பிணமாக மிதந்தனர்.

இவர்கள் சாவில் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. ஆனால் இதற்கு பின்னரும் செம்மரக்கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக கூலி தொழிலாளர்களை செம்மர ஏஜெண்டுகள் ஏமாற்றி அழைத்து சென்று செம்மரம் வெட்டி கடத்த பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட ஜவ்வாது மலை கிராமங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் ஆந்திர சிறைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை லாரியில் அழைத்து செல்லப்பட்ட 84 தமிழக கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதியில் இருந்து கடப்பா செல்லும் சாலையில் இன்று அதிகாலை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 4 குழுக்களாக பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் தார்ப்பாய் மூடப்பட்டு வேகமாக ஒரு லாரி ஒன்று வந்தது. அதனை மடக்கி சோதனை செய்தனர்.

அந்த லாரியில் நெருக்கியடித்தப்படி விலங்குகளை போல் 84 கூலி தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களை செம்மரம் கடத்த வந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர்.

அனைவரையும் திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான அனைவரும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் குறித்த விவரங்களை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தனித்தனியாக சேகரித்து வருகின்றனர்.

இந்த 84 பேரில் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் உள்ளனர். செங்கம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், திருவண்ணாமலை அரசு கல்லூரியில் எம்.காம். படித்து வருகிறார். திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார்.

கைதானவர்கள் போலீசாரிடம் கூறுகையில், கட்டுமான பணி, சமையல் வேலைக்கு ஜெயராம் என்பவர் அழைத்ததன் பேரில் அனைவரும் ஒரே லாரியில் புறப்பட்டு வந்தோம். அதிகமானோர் லாரியில் செல்வது வெளியே தெரியாமல் இருக்க லாரியில் தார்ப்பாய் போட்டு மூடியிருந்ததாக அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் இருந்து 84 கூலி தொழிலாளர்களை ஒரே லாரியில் ஏற்றி சென்றுள்ளனர். நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நிற்க வைத்து லாரியில் ஏற்றி சென்றுள்ளனர்.

விலங்குகளை ஏற்றி செல்வது போல் தொழிலாளர்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக லாரி உரிமையாளர் மீது மனித உரிமை மீறல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். கூலி தொழிலாளர்களை மட்டும் கைது செய்யும் போலீசார் தரகர்கள் மற்றும் செம்மரம் வெட்ட அழைத்து வரும் கடத்தல் கும்பல் தலைவனை கைது செய்வதில்லை. அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*