;
Athirady Tamil News

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் குழப்பம்…!!

0

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பேரவை தலைவர்களுக்கும், அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் இடையில் கடுமையாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும், தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பேரவை தொடர்ந்து இயங்குமா என்ற கேள்வி கூட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணியளவில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக 10 ற்கும் மேற்பட்ட ஊடகங்கள் வந்திருந்தன. ஆனாலும் குறித்த கூட்ட மண்டபத்திற்குள் யாழில் இருந்து செயற்படும் உள்ளுர் பத்திரிகை ஒன்றிற்கே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் செய்தி செகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மத்தியில் குழப்பநிலை காணப்பட்டதுடன், கூட்டத்தில் இடம்பெற்ற உண்மை விடயங்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஆயினும் குறித்த கூட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை கடுமையான வார்த்தை பிரயோகங்கள் சொற்போர்களில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

குறித்த கூட்டத்தின் நிறைவில் வெளியேறிய பிரதிநிதிகள் இறுக்கமான முகபாவத்துடன் காணப்பட்டதுடன், ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்குவதையும் தவிர்த்திருந்தமை தமிழ் மக்கள் பேரவைக்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதே வேளை தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இடம்பெறுமென பத்திரிகை வாயிலாக வெளிவந்த செய்திகளை அடுத்து, பலத்த எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.

குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் மாகாண சபை தேர்தலுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கவுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் தீர்வுக்கான ஒரே கொள்கை, கோட்பாடுடையவர்களை இணைத்துக் கொண்டு வரும் தேர்தலில் களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

ஆயிலும் நேற்றை கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை, மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் இருந்து பெற்ற தகவல்களின்படி தமிழ் மக்கள் பேரவை அரசியல் சார்பற்ற பொது அமைப்பாக செயற்படுவதற்கு முனைவதான கருத்துக்கள் பேரவை தலமைகளிடம் இருந்து வெளிப்பட்ட நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றம் காணப்பட்டன.

இதன் போது கருத்து வெளியிட்ட கட்சித் தலைவர் ஒருவர் தமிழ் மக்கள் பேரவை தொடர்ச்சியாக அரசியல் ஒன்றுக்குள் இறங்குவதாக தமிழ் மக்களை ஏமாற்றி தொடர்ந்தும் தமிழ் தேசியம் என்ற போர்வையில் அரச சார்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ் தரப்புக்கு தேர்தலில் ஆதரவு வழங்கும் நோக்கோடு செயற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குறித்த கூட்டத்தில் வடக்கில் முதன்முறையாக தனித்து களமிறங்கி கணிசமான தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதிகள் குறித்த கூட்டத்தை புறக்கணித்திருந்தமை தமிழ் மக்கள் பேரவைக்குள் முரண்பாடுகள் முற்றிவிட்டதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + eight =

*