;
Athirady Tamil News

ரணில் மைத்திரி ஆட்சியின் தமிழர் விரோத செயற்பாட்டை வெளிப்படுத்த பொதுக் கொள்கை…!!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் நல்லாட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் முரண்பாடுகள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா உள்ளிட்ட மேற்குலநாடுகளின் ஆதரவுடன் தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு செல்ல முற்பட்டிருந்தார். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு உடன்படாத நிலையில், சீனாவுடனான உறவை மீண்டும் பலப்படுத்த முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அமைச்சரவை மாற்றத்தின்போது கூட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்க மறுத்தமைக்கு பல காரணங்கள் இருந்தாலும், சீனாவுடனான உறவுகள் குறித்தும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுடன் கூடுதலான உறவுகளை பேணுவது ஆசியப்பிராந்தியத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையில்தான் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அதனால்தான் ரணில் மைத்திரியின் கூட்டுடன் நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

இதன் பின்னணில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா செயற்பட்டார். ஆனால் நல்லாட்சி உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சென்று விட்ட நிலையிலும், சீனாவுடன் உறவை ரணில் மைத்திரி அரசாங்கம் மேலும் வெவ்வேறு உதவிகளின் அடிப்படையில் புதுப்பிக்க தீர்மானித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவுடன் செய்விருந்த வேலைத் திடடங்களை சீனா, நல்லாட்சி அரசாங்கத்துடன் மிகவும் இலகுவான முறையில் செய்து முடிக்கின்றது என கொழும்பில் உள்ள மூத்த இராஜதந்திரி ஒருவர், கடந்த வாரம் கொழும்பில் செய்தியாளர் ஒருவரிடம் கூறியிந்தார்.

ஆகவே இங்கு இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் முக்கியன ஒரு நோக்கத்தை கூற முடியும். அதவாது யார் ஆட்சி அமைத்தாலும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்றை பௌத்த தேசியவாதம் பின்பற்றி வருவதை, தமிழ்த்தரப்பு மேற்குலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் உருவான இலங்கையின் வெளியுறவுக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றதில் இருந்து அந்தக் கொள்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசு மீதான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத்தின் வெளிப்பாடுதான் 2012ஆம் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம்.

இலங்கை அரசு என்பது பௌத்த கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவானது, என்ற அடிப்படையில் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பௌத்த கலாச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு ஆட்சிபுரிந்தன.

ஆகவே இந்தியா, சீனா, ஆகிய நாடுகளிடையே உள்ள முரண்பாடுகளை பயன்படுத்தி தமது பௌத்த தேசியவாதத்திற்கான பொருளாதார அரசியல் நோக்கங்களின் அடிப்படையில், இலங்கை அரசு அவ்வப்போது செயற்பட்டு வந்ததை, மேற்குலகநாடுகளின் ஆதரவுடன் உருவான ரணில் மைத்திரி நல்லாட்சியும் தற்போது வெளிப்படுத்தியுள்ளது எனலாம்.

ஆனால், இலங்கை அரசு என்ற கட்டமைப்பு தமது நலன்சார்ந்து, தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கு சர்வதேச ஆதரவை பெற்று பின்னர் தங்கள் அரசியல், பொருளாதார நலனில் கூட அக்கறை செலுத்தாத அல்லது புறம் தள்ளுகின்ற போக்கை கடைப்பிடிக்கின்றது எனபதை மேற்குலக நாடுகள் புரிந்துகொள்ள மறுப்பதும் இந்த நிலைக்கு காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

1920 ஆம் ஆண்டு பிரித்தானியரை எதிர்ப்பதற்காக தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து உருவாக்கிய தேசிய இயக்கம் பிளவுபட்டதில் இருந்து இனமுரண்பாடு ஆரம்பித்தது என்ற கருத்தின் அடிப்படையில், இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வெளியுறவு கொள்கை என்பது தமிழர் எதிர்ப்பு அரசியலாகவே காணப்படுகின்றது.

இலங்கையை பொறுத்தவரை சிறிய நாடு, அதுவும் இந்தியாவுக்கு அருகில் இருக்கும் நாடு என்ற உணர்வு, சீனா மற்றும் மேற்கத்தைய நாடுகளிடம் காணப்பட்டது. இந்த உணர்வு இலங்கை ஆட்சியாளர்களுக்கு வசதியாக அமைந்தும் விட்டது என்றும் கூறலாம்.

இதனால், இலங்கை மேற்படி நாடுகளுக்கு செல்லப்பிள்ளையாக இருப்பதற்கான ஒரு காரணமாகவும் அது அமைந்தது எனலாம். ஆனால் இவ்வாறான செல்லப்பிள்ளை விளையாட்டு அடுத்த சில ஆண்டுகளில் மேற்குலக நாடுகளுக்கு அரசியல், பொருளாதார ரீதியான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.

ஆகவே தமிழ்த் தரப்பு இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகநாடுகளை எவ்வாறு தமது நிலைப்பாட்டுக்கு சாதகமாக மாற்றலாம் அல்லது பயன்படுத்தலாம் என்பது குறித்து பொதுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்.

சீனா அரசியல் ரீதியாக எந்த விடயத்திலும் தலையிடாது என்பது வெளிப்படை. ஆனாலும் தமிழ்த்தரப்பு நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது தட்டிக்கழிக்க முடியாதவாறு கொள்கைகளை உருவாக்கி செயற்பட வேண்டும்.

தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னி, தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட தமிழ் கட்சிகள், மற்றும் பொது அமைப்புகள் வெளிநாடுகளை கையாளும் விடயத்தில் மாத்திரமாவது பொதுக்கொள்கை ஒன்றை மேற்படி பட்டறிவின் அடிப்படையில் உருவாக்கி செயற்பட வேண்டும்.

இல்லையேல் சர்வதேச அரசியல் தீர்மானங்களில் இருந்து தமிழ் மரப்பு தனிமைப்பட்டு விடும் என விமர்சகர்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*