பா.ஜ.க.வுக்கு அமோகமாக வாக்களித்த திரிபுரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி..!! (வீடியோ)

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 3 மாநிலங்களும் தலா 60 சட்டசபை தொகுதிகள் கொண்டவை. 3 மாநிலங்களிலும் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தலா 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பா.ஜனதா நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது. மாலை 4 மணி நிலவரப்படி பா.ஜனதா 43 இடங்களிலும், கம்யூனிஸ்டு 16 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. தொடர்ந்து பா.ஜனதா முன்னணி வகித்து வருவதால் அந்த கட்சியே ஆட்சியை கைப்பற்றுவது உறுதியானது.
இந்நிலையில், வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு அமோகமாக வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், திரிபுரா மக்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பா.ஜ.க.வுக்கு அளித்துள்ளனர். இந்த வெற்றி மறக்க முடியாதது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. திரிபுரா மக்கள் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. திரிபுரா மக்களுக்கு கண்டிப்பாக நல்ல ஆட்சியை வழங்குவோம் என பதிவிட்டுள்ளார்.