சாத்தான்குளம் அருகே சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி..!!

சாத்தான்குளம் அருகே உள்ள கந்தன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகள் மெர்லின் (வயது 9). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி வீட்டின் முன்பு உள்ள சுவற்றில் பிளாஸ்டிக் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக்கயிறு கட்டப்பட்டிருந்த சுவர் இடிந்து சிறுமி மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி மெர்லின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.
இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் விரைந்து வந்து பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேனியஸ் ஜேசுபாதம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.