ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!! (வீடியோ)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்.-அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. தினந்தோறும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அலை, அலையாய் வருகிறார்கள். இதன் காரணமாக ஜெயலலிதா சமாதியில் எந்த நேரமும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் இன்று காலை துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் பெயர் அருள் என்பதும், மதுரையை சேர்ந்த அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல்களை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று ஆயுதப்படை காவலர் அருள் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றார்.
சென்னை ஆயுதப்படை காவலர் ஒருவர் ஜெ.நினைவிடத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.