;
Athirady Tamil News

திரிபுராவை தொடர்ந்து தென் மாநிலங்களிலும் தாமரையின் ஆட்சி மலரும் – உ.பி. முதல்வர் நம்பிக்கை..!!

0

நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மூன்று மாநிலங்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிபுராவில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை தொகுதிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. பெற்றுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் ஆட்சியில் பங்கேற்க வருமாறு பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறாவிட்டாலும் அதிகபட்சமாக 21 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், திரிபுரா, நாகலாந்தை தொடர்ந்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தென் மாநிலங்களிலும் தாமரையின் ஆட்சி மலரும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லக்னோ நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யோகி ஆதித்யாநாத், வட கிழக்கு மாநிலங்களில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பா.ஜ.க. பெற்றதற்கு பிரதமர் மோடியின் வளர்ச்சிசார்ந்த திட்டங்களும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவின் ஒருங்கிணைப்பு ஆற்றலும் மிக முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.

வட கிழக்கு மாநில மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இங்கு பா.ஜ.க.வின் ஆட்சி அமையும். நாடு சுதந்திரம் பெற்ற நீண்ட காலத்துக்கு பின்னர் இங்குள்ள மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து மேம்பாட்டுக்கான பலன்களை அனுபவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் இனி தாமரை மலரும். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வாரம் பாராளுமன்ற இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள கோரக்பூர், புல்பூர் தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி அடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*