;
Athirady Tamil News

யானை தாக்கி உயிரிழந்த வன அதிகாரி மணிகண்டன் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

0

மைசூரு மாவட்டத்தில் நாகரஒலே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன் (45).

நேற்று முன்தினம் இரவு நாகரஒலே புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.பி.குப்பே வனச்சரகத்திற்கு உட்பட்ட தாட்டிஉண்டி கெரே பகுதியில் கபினி அணை அருகே காட்டுத் தீ ஏற்பட்டது. தகவலறிந்த மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் அதிகாலை 1.30 மணி அளவில் காட்டுத்தீயை அணைக்க அங்கு சென்றுள்ளனர்.

ஜீப்பை சாலையோரம் நிறுத்திவிட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் நடந்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மணிகண்டனும், வன ஊழியர்களும் தனித்தனியாக பிரிந்து சென்றதாக தெரிகிறது. அப்போது புதர் மறைவில் பதுங்கியிருந்த காட்டு யானை ஒன்று மணிகண்டனை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த அவர் காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனாலும் யானை அவரை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியதுடன், அவரை காலால் மிதித்துள்ளது.

மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த வன ஊழியர்கள் யானையை அங்கிருந்து விரட்டினர். படுகாயம் அடைந்திருந்த மணிகண்டனை அங்கிருந்து மீட்டு எச்.டி.கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துபோனதாக தெரிவித்தார்.

இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் பலியான வனத்துறை அதிகாரி மணிகண்டனின் உடல் சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், யானை தாக்கி உயிரிழந்த வன அதிகாரி மணிகண்டன் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வன அதிகாரி மணிகண்டனின் வனபாதுகாப்பு ஆர்வத்தை நாடு நினைவு கூரும் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*