;
Athirady Tamil News

ஒருமாத விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது..!!

0

ஒரு மாத விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் வங்கி மோசடி பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி தொடங்கியது. இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த கூட்டத் தொடரின் முதல் பகுதியில் பிப்ரவரி 1-ந்தேதி நிதி மந்திரி அருண்ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 9-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. பின்னர் இரு அவைகளுக்கும் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட கூட்டத் தொடர் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பிய மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் மோசடி, ரோட்டோமேக் பேனா கம்பெனியின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரியின் ரூ.3,695 கோடி வங்கி மோசடி, ஆபரண வியாபாரி ஜதின் மேத்தாவின் ரூ.6,712 கோடி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ், இடது சாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வங்கி மோசடி குறித்து பிரதமர் மோடியை வெளியில் கடுமையாக விமர்சித்து வருவதால் அது நாடாளுமன்ற மக்களவையிலும் பலமாக ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தும் எனத் தெரிகிறது. இதுபற்றி காங்கிரஸ் மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதற்கு இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதேபோல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் குறித்த பிரச்சினையிலும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பும் எனத் தெரிகிறது.

அதேநேரம் அண்மையில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றிருப்பது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதாவும் தக்க பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி மோசடிகள் அனைத்தும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்தவை என்று பா.ஜனதா கூறி வருவதால் நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் சரிக்கு சரி நிகராக மல்லுக்கட்டும் என எதிர்பார்க்கலாம்.

ஆந்திர மாநிலத்துக்கு, சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் பட்ஜெட் முதல் கட்டத் கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதுபோல வரும் தொடரிலும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரச்சினையை கிளப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ள முத்தலாக் சட்ட மசோதா, இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதா ஆகியவற்றை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஆளும் பா.ஜனதா மும்முரமாக உள்ளது.

இதேபோல் பொருளாதார குற்றவாளிகள் தடுப்பு மசோதாவை (அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கான சட்டம்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மோடி அரசு முடிவு செய்துள்ளது.

நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையா, விக்ரம் கோத்தாரி, லலித் மோடி போல மீண்டும் யாரும் மோசடியில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 14 =

*