;
Athirady Tamil News

ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன், நாளை முதல் ரஜினிகாந்த் 4 நாட்கள் ஆலோசனை..!!

0

தமிழக அரசியல் களம், நடிகர்கள் ரஜினி, கமல் வருகையால் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

திரைத்துறையில் அவர்கள் இருவருக்கும் இடையே எப்படி போட்டி இருந்ததோ, அதே போன்று அரசியலிலும் உருவாகியுள்ளது.

கமல்ஹாசன் கடந்த மாதம் “மக்கள் நீதி மய்யம்” என்ற புதிய கட்சியை மதுரையில் தொடங்கினார். இதைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து, கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். அடுத்து அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) திருச்சியில் கட்சி மாநாட்டை நடத்த உள்ளார்.

கமல்ஹாசனின் கட்சி நடவடிக்கைகள் தீவிரமாகி வருவதால், ரஜினியின் கட்சிப் பணிகள் எப்போது தீவிரம் பெறும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஜினி, புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பு தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை முதலில் ஒருங்கிணைக்க முடிவு செய்தார்.

இதற்காக அவர் “ரஜினி மக்கள் மன்றம்” தொடங்கியுள்ளார். அதில் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பொது மக்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

ரஜினி மக்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து அதன் கட்டமைப்பை மிக வலிமையானதாக மாற்ற வேண்டும் என்பது ரஜினியின் இலக்காக உள்ளது. குறைந்த பட்சம் தமிழகத்தில் 1 கோடி பேரை ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த பணியை தீவிரப்படுத்த மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. அவர்களில் ஆர்வம் உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுவரை 10 மாவட்டங்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இந்த பணி தொடங்கி விட்டது.

முதல் கட்டமாக ஜனவரி மாதம் வேலூர், நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் ரசிகர் மன்றத்தினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. பிறகு தேனி, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த 10 மாவட்டங்களுக்கும் உட னுக்குடன் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மேலும் 6 மாவட்டங்களின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான நேர்காணல் நாளை (6-ந் தேதி செவ்வாய்க்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர், செயலாளர் ராஜு மகாலிங்கம் இருவரும் இந்த நேர்காணலை நடத்துவார்கள்.

நாளை தஞ்சையில் நேர் காணல் நடக்கிறது. 7-ந்தேதி திருச்சியிலும், 8-ந்தேதி பெரம்பலூர், அரியலூரிலும் நேர்காணல்கள் நடத்தப்படுகிறது. 9-ந்தேதி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் நேர் காணல் நடைபெறும்.

ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களிடம் நேர்காணல்கள் நடைபெறும் போது, அவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட ரஜினி முடிவு செய்துள்ளார். மன்றத்தினர் எப்படி செயல்பட வேண்டும் என்று ரஜினி அறிவுரை கூறுவார்.

அது மட்டுமின்றி மன்ற உறுப்பினர்களிடம் ரஜினி கருத்துக்களை கேட்டு அறிவார். குறிப்பாக புதிய கட்சிக்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க முக்கியத்துவம் கொடுத்து ரஜினி கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த 6 மாவட்ட உறுப்பினர்களிடம் நேர்காணல் முடிந்ததும், அந்த 6 மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் 16 மாவட்டங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டியதுள்ளது.

இந்த பணிகள் அனைத்தையும் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்துக்குள் நிறைவு செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ரஜினி தனது புதிய கட்சி மற்றும் கொடியை மக்களை திரட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 15 =

*