;
Athirady Tamil News

வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை, விவசாய அமைச்சர் க.சிவநேசன்..!!

0

வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அதன் நோக்கத்தையே நாம் எதிர்கின்றோம். -விவசாய அமைச்சர் க.சிவநேசன்

வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அதன் நோக்கத்தையே நாம் எதிர்கின்றோம். அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் நாம் எமது வடமாகாணத்திற்கான விவசாய கொள்கை ஒன்றை வகுத்துள்ளோம் என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

வடமாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்கு நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிலைக்கு மக்கள் தான் காரணம் எனக் கூற முடியாது. அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவே குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போயின.

பல நூற்றுக்கணக்கான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளமையால் அதன் கீழான விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

மகாவலி திட்டத்துடன் தொடர்புடையதாக படிமுறை நீர்பாசனத் திட்டம் ஒன்றை தற்போது இங்கு கொண்டு வந்துள்ளார்கள். எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற 28 அல்லது 30 குளங்கள் கூட அதனால் பயனடையவுள்ளதாக கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த முறை ஒரு சிறப்பான முறையாக இருந்தாலும் கூட இங்கு கொண்டு வருகின்ற போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மொரக்காகந்த நீரினை இங்கு கொண்டு வருவதாக இருந்தால் சேமமடு குளத்தில் அந்த நீரை சேமித்து இரணைமடுக்குளம் வரை அந்த திட்டத்தை கொண்டு செல்வதாக அவர்களது திட்டங்கள் உள்ளன.

ஆனால் அந்த திட்டங்களை மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் அமுல்படுத்துகின்ற போது அது எங்களுடைய வடமாகாண அரசை அல்லது ஆட்சியை அல்லது எங்களது இருப்பை கேள்விக் குறியாக மாற்றக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது.

ஆகவே, அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொண்டு இந்த திட்டத்தை அரசாங்கம் செய்வதாக இருந்தால் இது தொடர்பில் ஒரு ஒப்பந்தத்தை அல்லது பேச்சுவார்த்தையை வடமாகாணத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நீர் வடமாகாணத்திற்கு வருகின்ற போது அது வடமாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் கீழே வரவேண்டும். அப்படி செய்வார்களாக இருந்தால் அது சிறப்பான திட்டமாக அமையும். மற்றவர்கள் சந்தேகம் கொள்ள முடியாது.

மணலாறுப் பிரதேசம் மகாவலி குடியேற்றத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பின் தான் அங்கு பல குடியேற்றங்கள் தோற்றம் பெற்றன. தெற்கில் உள்ள மக்களை அங்கு கொண்டு வந்து குடியேற்றினார்கள்.

இது ஒரு சட்டத்திற்கு புறம்பான செயல். அரசியல் யாப்பில் கூட இப்படியான திட்டங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. முதலில் அந்த மாவட்டம், அடுத்து அந்த மாகாணம் அங்கு அவ்வாறு குடியேற்ற மக்கள் இல்லாது போனால் மட்டுமே வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்ற முடியும்.

இந்த படிமுறை நீர்பாசன அபிவிருத்தி திட்டத்திற்கு வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் வடமாகாண சபை எதிராக இருப்பதாக சிலர் கூறலாம்.

ஆனால் அப்படி இல்லை. அது ஒரு சிறந்த திட்டம். இங்கு இருக்கின்ற மக்களுக்கு அது வரப்பிரசாதம்.

ஆனால் அந்த திட்டம் கொண்டு வருகின்ற முறையைத் தான் நாங்கள் விமர்சிக்கின்றோம் என்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது யாரின் ஊடாக வருகின்றது. அதன் நோக்கம் என்ன. அபிவிருத்தி மட்டும் தான் நோக்கமா என பல விடயங்களை நாம் சிந்ததிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அரசியலில் நாங்கள் சில தவறுகளை செய்வோமாக இருந்தால் இன்று ஆதரிக்கும் மக்களே எதிர்காலத்தில் நீங்கள் ஏன் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கினீர்கள் எனக் கேட்பார்கள்.

நீங்கள் அனுமதித்ததால் தான் எங்களுடைய பிரதேசம் பறிபோய் விட்டது என்று கூறுவார்கள். எனவே திட்டம் என்பது எமது பிரச்சனை இல்லை. அதன் நோக்கம் தான் எமது பிரச்சனை.

இதுதவிர, வடமாகாணத்திற்கான பயிற்செய்கை தொடர்பான ஒரு கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நெற்செய்கை தொடக்கம் ஒவ்வொரு பயிற்செய்கை தொடர்பிலும் வகுத்து அதன் மூலம் வடமாகாண விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.

அதனால் வடமாகாண விவசாய கொள்கைளை நாம் அறிமுகப்படுதகின்றோம். அதன் மூலம் நாம் விவசாயத்தை மேலும் முன்னேற்றமான பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, இ.இந்திரராசா, ம.ஜெயதிலக, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.சத்தியசீலன், வவுனியா அரச அதிபர் சோமரட்ன விதான பத்திரண, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், விவசாய திணைக்கள மற்றுமட கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*