திகன சம்பவத்தின் எதிரொலி: 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்…!!

நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கண்டி திகன பகுதியில் தொடரும் பதற்ற நிலை தொடர்பாக இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போதிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும், பதற்றமான பிரதேசங்களில் பாதுகாப்பு பிரிவினரை பணியில் அமர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கண்டி தெல்தெனிய பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கண்டி தெல்தெனிய, திகன மற்றும் பல்லேகல உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்துள்ள நிலையில், அங்கு விசேட அதிரடிப்படையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.