;
Athirady Tamil News

கலவரங்களுக்கு ரணிலும், பொலிஸாருமே பொறுப்பு; பொதுபலசேனா குற்றச்சாட்டு..!!

0

கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான முழுப்பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பொலிஸாருமே ஏற்கவேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும், அமைச்சர் மனோ கணேசனும் பெருமளவு பணத்தை விரயம் செய்து தோல்வி கண்டிருப்பதாக தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட அனைவரையும் பேச்சுவார்த்தைக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

கண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டாவது நாளாக இன்றைய தினமும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதோடு 6 வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்காவில் மீண்டும் அவசர காலச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கலவரத்துடன் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக இன்று கண்டனங்களும் வெளியிடப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை பொதுபலசேனா அமைப்பு கொழும்பில் இன்று நடத்தியது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர், எவரும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கியதோடு நல்லிணக்கம் பற்றி அரசாங்கத்திற்கு கற்றுக்கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

“முதலாவதாக கண்டியில் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கான முழுப்பொறுப்பும் பிரதமரும், பொலிஸாருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை கைது செய்ததையும், விளக்கமறியலில் வைக்கப்பட்ட தகவலை நாட்டிற்கு பொலிஸார் வெளிப்படுத்தியிருந்தால் இளைஞர்கள் இடையே ஆவேசம் ஏற்பட்டிருக்காது. பொலிஸார் இத்தகவலை வெளியிடாதிருந்தமை தவறு என்பதையே சுட்டிக்காட்டுகிறோம். தகவல்கள் ஊடகங்களுக்கும், மக்களுக்கும் வழங்கப்படவில்லை.

இன்று எமது கடமையானது யார்மீதும் தாக்குதல் நடத்தவோ அல்லது கடைகளை உடைத்து நொருக்கவோ அல்ல. அது முட்டாள்தனம். சிலர் இன்று வந்து சேதங்களை ஏற்படுத்தி நாளை சென்றுவிடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் உதவவேண்டும். யாரும் குழப்பமடைய வேண்டாம்.

குழப்பமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாடே பின்நோக்கி நகர்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குழப்பநிலை ஏற்படுகிறது. எனவே முஸ்லிம் மக்களுக்கும், குழப்பமடையும் சண்டியர்களுக்கும் அனைவருக்கும் நாங்கள் தயவுசெய்து கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். அனைத்தையும் நிறுத்திவிடுங்கள்.

அமெரிக்க தூதரகம் உட்பட மேற்குலக தூதரகங்கள் சந்திரிகா அம்மையாருக்கும், மனோ கணேசனுக்கும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெருந்திரளான பணத்தை வழங்கிவருகிறது. 3 வருடங்களில் அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்ததா? நல்லிணக்கம் என்ற பெயரில் தொலைக்காட்சி ஆரம்பித்தோ அல்லது திரைப்படங்கள் மற்றும் கலந்துரையாடல், செயலமர்வுகளை நடத்தியோ அதனை முழுமைப்படுத்த இயலாது.

நல்லிணக்கம் என்ன என்பதை உலமாக்களுக்கும், அதேபோல அரசாங்கத்திற்கும் கற்றுக்கொடுக்க எம்மால் முடியும். ஜிந்தோட்டை, அளுத்கம பகுதிகளில் நாங்கள் அதனை ஏற்படுத்தியிருக்கின்றோம். முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் ஓர் அழைப்பை விடுக்கின்றோம். அனைவரும் ஒருமேசைக்கு வந்து பேச்சுநடத்துவோம்.

முன்பு பொதுபலசேனாவை ஏசினார்கள். ஆனால் அளுத்கம சம்பவம் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறியும்படி நாங்கள் இன்றும் வலியுறுத்தியே வருகின்றோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − twelve =

*