;
Athirady Tamil News

நடிப்பின் மூலம் கிடைத்த பணத்தில் கழிப்பறைகள் கட்ட உதவிய கர்நாடக மாணவி..!!

0

பெங்களூரை அடுத்த கிரி நகரைச் சேர்ந்தவர் பி.ஜி.ராமகிருஷ்ணா. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் பிரதியுக்‌ஷா (13). இவள் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வருகிறார்.

இவள் சாண்டாஸ் (கழிப்பறை) என்ற கன்னட படத்தில் ‘மல்லம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாள். அதில் கோப்பல் மாவட்டம் தனபுரா கிராமத்தில் தனது வீட்டில் கழிப்பறை கட்ட வலியுறுத்தி 3 நாட்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது போன்று அவள் நடித்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அதில், அவள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாள். படத்தில் நடித்ததற்காக அவளுக்கு ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை தனபுரா கிராமத்தில் கழிப்பறைகள் கட்டுவதற்காக வழங்கி இருக்கிறார்.

தனப்புரா கிராமம் பெங்களூரில் இருந்து 350 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 300 வீடுகள் உள்ளன. அவற்றில் 80 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. அங்கு வாழும் பெண்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க இரவு வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

சினிமா பட சூட்டிங்கின் போது அக்கிராமத்தில் பிரதியுக்‌ஷா 40 நாள் தங்கியிருந்தார். அப்போது அக்கிராம பெண்கள் படும் துயரத்தை அறிந்து மனம் வருந்தினார். அதனால் தான் அங்கு கழிப்பறைகள் கட்ட நான் நடித்து சம்பாதித்த ரூ.1 லட்சத்தை வழங்கினேன் என பிரதியுக்‌ஷா தெரிவித்தாள்.

இதற்கிடையே மாணவியின் கழிப்பறை கட்டும் நடவடிக்கை ‘சாண்டாஸ்’ படக்குழுவினரையும் கவர்ந்தது. மாணவி பிரதியுக்‌ஷாவின் முயற்சியில் தாங்களும் பங்கேற்க இருப்பதாக இப்படத்தின் டைரக்டர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் கழிப்பறை கட்ட அரசு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இருந்தாலும் தனபுரா கிராம மக்கள் பணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு 100 கழிப்பறைகள் கட்டித் தர படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘சாண்டாஸ்’ திரைப்படம் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அங்கு கழிப்பறை கட்டும் பணி தொடங்கும் என இப்படத்தின் டைரக்டர் அஜய்குமார் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + seventeen =

*