ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி விசாரணை – சசிகலா வாக்குமூலம் 9-ந்தேதி பதிவு..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சசிகலாவுக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு சிறை வளாகத்தில் உள்ள சிறை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் ஓரளவு குணம் அடைந்து விட்டதால் அவர் சிறை அறைக்கு திரும்பி விட்டார். இது குறித்து சிறை தலைமை சூப்பிரண்டு சோம சேகரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
சிறை ஆஸ்பத்திரியில் சசிகலாவுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் சிறையில் உள்ள அவரது அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே தான் உள்பட 3 பேர் சிறையில் இருக்கும் போது தினகரனின் சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்த சசிகலா வேதனை அடைந்ததாகவும், இதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருங்கிய உறவினர் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி நேற்று சசிகலாவுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்தார். ஏற்கனவே 5 முறை கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், முறையான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லையென்றால் உங்களுக்கு எதிராக முடிவு எடுக்கப்படும் என்றும் கூறி சசிகலா மீண்டும் கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
ஏற்கனவே சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்து இருந்தவர்களின் வாக்குமூலங்கள் அடங்கிய 2 ஆயிரத்து 956 பக்க ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் கொடுத்து இருந்தது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா வாக்குமூலம் வருகிற 9-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
இந்த வாக்குமூலங்களை பெற அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் வருகிற 9-ந்தேதி பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து அவரது வாக்குமூலங்களை பெற்று அதன் பிறகு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தாக்கல் செய்ய உள்ளார். 9-ந்தேதி தினகரனும் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.