;
Athirady Tamil News

திகன,தெல்தெனிய வன்முறைக்குப் பின்னால் அரசியல் குண்டர் குழுக்கள்…!!

0

ஸ்ரீலங்காவில் அண்மைய நாட்களாக இடம்பெற்றுவருகின்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்ற குழுக்கள் இருப்பது தெரியவந்திருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த நாசகார செயற்பாடுகளுக்கு மக்களை இணைத்துக் கொள்கின்ற முயற்சிகளும் குறித்த அரசியல் குழுக்கள் முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று புதன்கிழமை பகல் நடைபெற்றது.

கண்டி திகன,தெல்தெனிய மற்றும் அம்பாறை பகுதிகளில் அண்மைய நாட்களாக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஸ்ரீலங்கா முழுவதிலும் பரபரப்பு நிலை ஏற்பட்டிருப்பதோடு 6 வருடங்களுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் அவசர காலச் சட்டமும், கண்டி மாவட்டத்தில் மூன்றாவது நாளாகவும் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அசாதாரண நிலைமை தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கபீர் ஹாஷிம், அனைத்து இன மக்களையும் பாதுகாப்பதற்கான கடமை அரசாங்கத்திற்கு இருப்பதாக கூறினார்.

“இந்த சம்பவங்களின் பின்னால் ஒரு குழு செயற்படுகிறது. அந்தக் குழு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவது தெளிவாக காணமுடிகிறது. சாதாரண மக்களின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சம்பவங்கள் அல்ல என்பதையும், வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குழுக்களே இதனை செய்திருப்பதாகவும் காணமுடிகிறது.

ஊடகங்கள் மற்றும் இதர மூலங்கள் ஊடாக மக்களை கோபமடையச் செய்தலும், கிராமங்களுக்குச் சென்று அப்பாவி மக்களை இதில் சேர்ப்பதற்கான முயற்சி, சில அரசியல் குழுக்கள் வீடுகளில் இருந்துகொண்டு இதனை செயற்படுத்துவதாக புலப்படுகிறது. திட்டமிடப்பட்ட குழுக்களால் இது செயற்படுத்தப்படுவதாக உணரவும் முடிகிறது.

ஜனாதிபதி நேற்று அமைச்சர்களுடன் சந்திப்பை நடத்தினார். முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டத்தை நிலைநாட்டுவதற்கும், அதற்குத் தேவையான அதிகாரங்களை அரசியலமைப்பின் ஊடாக பயன்படுத்தி ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு செயற்படுவதாக ஜனாதிபதியும், பிரதமரும் எமக்குத் தெரிவித்தனர்.

அரசாங்கம் என்ற வகையில் இதனை செய்வது கடமையாகும். அனைத்து இனத்தவர்களினதும் பாதுகாப்பானது அரசாங்கத்தினால் உறுதிப்படுத்துவதற்கான சரியான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் வன்முறைகளிலும், மதஸ்தலங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*