;
Athirady Tamil News

வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை…!!

0

இனங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மோதல்கள் தொடரும் பகுதிகளில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட இராணுவம் உட்பட முப்படையினர், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களை இலக்கு வைத்து சிங்கள கடும்போக்காளர்களால் இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கண்டி மாவட்டத்திற்கு நேற்று புதன்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்திருந்தார்.

இன வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலமைகளை அவதானித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனையடுத்து கண்டி மாவட்ட அரச அதிபரின் அலுவலகத்தில் பிரதேசத்தின் பாதுகாப்பையும் சட்டம் – ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விடையங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார்.

இந்தக் கூட்டத்திற்கு சிங்கள பௌத்த மதத்தவர்களின் முக்கிய மதத் தலைமை பீடங்களான அஸ்கிரிய – மல்வது பீடங்களின் தலைமை பௌத்த பிக்குகள் முஸ்லீம் மௌலவிகள், பொலிஸ், இராணுவம் உட்பட படை அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது தற்போது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக உறுதியளித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் அனைத்துமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அங்கு வந்திருந்த படைத் தளபதிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 6 =

*