;
Athirady Tamil News

சதீஷ்குமாரின் செல்போனை தீவிரமாக ஆராய வேண்டும் – சகோதரர் வேண்டுகோள்..!! (வீடியோ)

0

தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர் சதீஷ்குமாரின் சகோதரர் மணிவண்ணன் (சித்தப்பா மகன்) கூறியதாவது:-

சதீஷ்குமார் எம்.எஸ்.சி, எம்.டெக் படித்தவர். அறிவியலிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நல்ல அறிவு உடையவர். பணியிலும் சிறப்பான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். சவாலான வழக்குகளிலும் திறமையாக பணியாற்றியவர். எந்த விஷயத்திலும் தீர யோசித்து முடிவு எடுக்க கூடியவர். பயமில்லாதவர்.

நேற்று (நேற்று முன்தினம்) இரவு வரை எங்களுடனும், நண்பர்களுடனும் ஜாலியாக பேசினார். ஆனால் நள்ளிரவில் இப்படி ஒரு விபரீத சம்பவம் நடந்திருக்கிறது.

குடும்ப சூழல் நிச்சயமாக இதற்கு காரணம் கிடையாது. அதேவேளை பணிச்சுமை காரணமல்ல என்றும் உறுதியாக கூறமுடியவில்லை. எனவே இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணி வரையிலான 2 மணி நேரத்தில் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதுதான் இந்த விபரீதத்துக்கு நிச்சயம் காரணமாக இருக்க முடியும்.

எனவே, சதீஷ்குமாரின் செல்போனை தீவிரமாக ஆராயப்படவேண்டும். இதில் போலீசார் எந்தவித தலையீடும் இல்லாமல் நியாயமாக விசாரிக்க வேண்டும். தவறு எங்கு நடந்திருந்தாலும் நேர்மையான நடவடிக்கை பாயவேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சம்பவம் இனி நிகழாத வகையில் போலீசார் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரின் சகோதரர் சரவணன் (பெரியப்பா மகன்) கூறியதாவது:-

சதீஷ்குமார் 2011-ம் ஆண்டில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டான். அதற்கு முன்பு சேத்துப்பட்டில் குற்றப்பிரிவில் பணியாற்றினான். நேர்மையானவன். தனது பணிக்காலத்தில் லஞ்சமாக எதையுமே அவன் வாங்கியது கிடையாது. யார் காசுக்கும், பொருளுக்கும் ஆசைப்படமாட்டான்.

அவனது குடும்பமும் ஓரளவு வசதி தான். எனவே பொருளாதார சூழலில் அவன் பாதித்தது கிடையாது. சம்பள பணத்தை தவிர அவனுக்கு வருமானம் கிடையாது. தனது நேர்மையை அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டு கொள்வான்.

தற்போது அவனுக்கு பெண் பார்த்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதை அவன் பொருட்படுத்தியதே கிடையாது. பணியில் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதே அவன் லட்சியமாக இருந்தது.

தனது துறை உயர் அதிகாரிகளுடன் செல்போனில் சகஜமாக பேசும் அவனை ஆச்சரியமாக பார்ப்போம். தற்போதும் அவனது சொந்த ஊர்க்காரர்கள் அவனை மிகப்பெரிய முன்னுதாரணமாக பேசுவார்கள். அவனைபோல நேர்மையான, துடிப்பான அதிகாரியாக இருக்க வேண்டும் என பெருமையாக சொல்வார்கள்.

சதீஷ்குமார், சென்னையிலேயே நிரந்தரமாக பணிபுரிய ஆசைப்பட்டான். இதற்காக சொந்த ஊர் உள்பட அருகில் உள்ள ஊர்களுக்கும் பணி மாறுதல் ஆணை (டிரான்ஸ்பர்) கிடைத்தும் செல்லவில்லை. சென்னையில் இருந்தால் தான் நிறைய பழக்கவழக்கங்கள் கிடைக்கும், பெரிசா சாதிக்கலாம்னு அடிக்கடி அவன் சொல்லுவான்.

இப்படிப்பட்டவன் ஏன் இந்த முடிவை எடுத்தான்? என்பது எங்களுக்கு புரியவில்லை. அவன் கோழை கிடையாது. ஆனால் அவனது இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையான காரணம் வெளிச்சத்துக்கு வந்தாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − three =

*