;
Athirady Tamil News

மார்ச் முதல் மே மாதம் வரை வெயில் தாக்கம் வழக்கத்தைவிட 5 டிகிரி கூடுதலாக இருக்கும்..!!

0

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் திருத்தணி, வேலூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் வெயில் தாக்கம் 110 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியது.

2016-ம் ஆண்டு நாடு முழுவதும் கோடைக்காலத்தில் சுட்டெரித்த வெயிலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வெயில் தாக்கத்தால் இறந்தனர்.

வழக்கமாக மார்ச் மாதம் இறுதியில் தான் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாத தொடக்கத்திலேயே சூரியன் தகிக்கத் தொடங்கிவிட்டது. சேலம் உள்ளிட்ட சில நகரங்களில் இப்போதே 100 டிகிரியை எட்டத் தொடங்கிவிட்டது. எனவே இந்த ஆண்டும் வெயிலின் உக்ரம் உச்சத்தை தொடும் என்றே தெரிகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும். முக்கியமாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் சராசரியைவிட ஒரு டிகிரிக்கு மேல் அனல் கக்கும். பஞ்சாப், உத்தரகாண்ட், டெல்லி, அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் வழக்கத்தைவிட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெயில் அளவு பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய பகுதிகளில் வெயில் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் அதனை சமாளிக்க என்ன செய்யலாம்? என்று ஒவ்வொருவரும் தற்போது திட்டமிட தொடங்கிவிட்டனர்.

கோடையை சமாளிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நொங்கு விற்பனை களைகட்டியுள்ளது. சாலையோரங்களில் பழங்கள் குவித்துவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் விரைவில் இறுதி தேர்வுகளை நடத்திமுடித்து, முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். சில பள்ளிகளில் மார்ச் மாத இறுதியில் இருந்து கோடைக்கால விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் பல பள்ளிகள் ஏப்ரல் 25 வரை பள்ளி வேலை நாட்களை அறிவித்துள்ளது. இது பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − three =

*