;
Athirady Tamil News

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்..!!

0

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

அரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக இன்று இமயமலை செல்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது முக்கிய ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ரஜினி ஆசிபெறுகிறார். ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினி கட்டியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது. சினிமா படப்பிடிப்பு வேலைகள், தொடர்மழை காரணமாக பாபாஜி ஆசிரமம் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை. எனவே இந்த சுற்றுப்பயணத்தின் போது பாபாஜி ஆசிரமத்துக்கு ரஜினி செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் ஆசிரம விரிவாக்க பணிகளையும் பார்வையிடுகிறார்.

இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். போயஸ்கார்டன் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன். அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன்; புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன் என தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*