;
Athirady Tamil News

இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன ஆர்ப்பட்டம்…!!

0

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்ட எம்மை, மீண்டுமொரு இனவாத யுத்தத்திற்குள் தள்ளும் முயற்சியாக, அண்மையில் அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன.

இத்திட்டமிட்ட வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 13.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைத்து நிற்கின்றது.

இவ் அழைப்பானது இவ்வமைப்பின் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோரால் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், கடந்த காலங்களில் எம்மீது திணிக்கப்பட்ட தமிழ் – சிங்கள இனமுரண்பாட்டுத் தீயினை, திட்டமிட்ட இனக் கலவரங்களினூடாக கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, பின்னர் கொடிய யுத்தம் ஒன்றிற்குள் எமது தேசத்தைக் கொண்டுபோய்த் தள்ளி, பெரும் அழிவுகள் ஏற்படக் காரணமான சக்திகள், மீண்டும் அதே வகையில், அக் கொடிய யுத்தத்தினால் பாதிப்பை எதிர்கொண்ட இலங்கையின் இன்னொரு தேசிய இனமான முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடுவதன் மூலம், முஸ்லீம் – சிங்கள இனமுரண்பாட்டு யுத்தமொன்றை ஏற்படுத்தி, தமது குறுகிய அரசியல், பொருளாதார நலன்களுக்காக எம் வாழ்வை அழிக்க முனைகின்றன.

எனவே, இந்த உண்மையை உணர்ந்துகொண்டு, எமதும், எமது எதிர்கால சந்ததியினதும் இருப்பைக் காத்துக்கொள்ளும் பொருட்டு, எம் மத்தியில் இன, மத, மொழி அடிப்படையிலான பேதங்களைப் பெரிதாக்கி, எமது வாழ்வை அழிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக, நாம் அனைவரும் ஒற்றுமையாகக் குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம். எனக் கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + eight =

*