;
Athirady Tamil News

குஜராத் தேர்தலில் ராகுல் காந்தியை சந்திக்காமல் இருந்தது எனது தவறு – ஹர்திக் படேல்..!!

0

குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தியை சந்திக்காத தவறை செய்ததால்தான் அங்கு பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது என பதிதார் போராட்ட குழு தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூடியது. இந்த போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், அவர்மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை மாநில அரசு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ.க. 99 இடங்களைப் பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஹர்திக் பட்டேல் ஆதரவு தெரிவித்தும் இந்த தேர்லில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பதிதார் போராட்ட குழு தலைவர் ஹர்திக் படேல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தியை சந்திக்காத தவறை செய்ததால்தான் அங்கு பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில தேர்தலின்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தேன். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தேன், மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்தேன்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நான் சந்திக்கவே இல்லை. மீடியாக்கள் தான் நான் அவரை சந்தித்ததாக செய்திகள் வெளியிட்டன. ராகுலை சந்திப்பது எனக்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல. அப்படி நான் ராகுலை சந்தி்த்திருந்தால் நிச்சயம் அங்கு பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்காது. 99 இடங்களை பெறுவதற்கு பதிலாக பா.ஜ.க. வெறும் 79 இடங்களை மட்டுமே பிடித்திருக்கும். குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தியை சந்திக்காமல் இருந்தது எனது தவறு.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்பதால் நாம் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட மோடிக்கு வாய்ப்பளித்தோம். ஆனால் அவரது தலைமையிலான ஆட்சியில் இவை ஒன்றுமே நடக்கவில்லை என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*