;
Athirady Tamil News

“மகாசேன பலகாய” அமைப்பு சுதந்திரமாக இயங்க யார் அனுமதித்தது..!! (படங்கள்)

0

கண்டி மாவட்டத்தின் திகன – தெல்தெனிய ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இன வன்முறைகளுக்கு தலைமை தாங்கிய மகாசேன பலகாய என்ற அமைப்பிற்கு பகிரங்கமாக செயற்பட யார் அனுமதி வழங்கியது என ஸ்ரீலங்காவின் சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களில் ஒன்றான மல்வது பீடத்தின் மகாநாயக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் இன வாதத்தை தூண்டுபவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தி கடுமையான தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் மகாநாயக்கர் வலியுறுத்தியுள்ளார்.

இன வன்முறைகளால் ஏற்படக்கூடிய பேரழிவு தொடர்பான பாடத்தை முப்பது வருட கொடிய யுத்ததத்திலிருந்தும் கற்றுக்கொள்ளாது விட்டால் இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது என்றும் எச்சரித்துள்ள மல்வது பீட மகாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், இனியாவது நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கட்சி, அரசியல், மதம், மொழி, இன பேதமின்றி இனியொரு இன வன்முறை ஏற்படாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

ஸ்ரீலங்காவின் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் சபாநாயகர் கரு ஜயசூரிய ஸ்ரீலங்காவின் சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களில் ஒன்றான மல்வது பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்த போதே அவர் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தியிருக்கின்றார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் சபாநாயகர் கரு ஜயசூரிய ஸ்ரீலங்காவின் சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களில் ஒன்றான மல்வது பீடத்தின் மகாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை மார்ச் 11 ஆம் திகதி சனிக்கிழமை சந்தித்தார்.

கண்டி மாவட்டத்தின் திகன – தெல்தெனிய பகுதிகளில் மார்ச் நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கள கடும்போக்காளர்கள் முஸ்லீம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிட்ட இன வன்முறைகளை அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சபாநாயகருடன், ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி – சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி, பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கண்டியில் ஒருசிலரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் நாட்டின் நற்பெயருக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய தெளிவுபடுத்தினார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + fourteen =

*