;
Athirady Tamil News

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!

0

புவி வெப்பமயாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டியதை வலியுறுத்தி கடந்த 2015-ம் ஆண்டு லண்டனில் உள்ள விம்பிளே விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

இதற்கென உலகில் உள்ள 121 முக்கிய நாடுகள் இடம்பெறும் மாபெரும் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர், டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டின்போது சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு என்னும் அமைப்பை அவர் உருவாக்கினார். இதை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் பாரிஸ் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டிலும் இதே கொள்கையை அவர் முன்வைத்தார்.

இந்த கூட்டமைப்பை உருவாக்கும் விரிவான செயல்திட்டம் 30-11-2015 அன்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே – பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லி அருகேயுள்ள குர்கான் நகரில் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் தலைமை செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியை மின் தேவைகளுக்கு பயன்படுத்தும் நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்த அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று இந்த அமைப்பை முறைப்படி அறிவிக்கும் முதல் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானும் இணைந்து டெல்லியில் தொடங்கி வைத்தனர். இந்த உச்சி மாநாட்டில் 23 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், 10 நாடுகளை சேர்ந்த மந்திரிசபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த தொடக்க விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சூரியனின் மூலம் பெறும் எரிசக்தியால் வளங்கள் பெருகுவதுடன், பூமியில் இருந்து கரியமில வாயுவின் தடத்தை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சூரியனை பிரபஞ்சத்தின் ஆன்மா என்று இந்திய வேதங்கள் குறிப்பிட்டுள்ளன. பருவநிலை மாற்றம் என்னும் சவாலை இன்று எதிர்கொண்டுள்ள நாம் இந்த பழமையான – அனைவருக்கும் ஏற்புடைய சமநிலை தத்துவத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் சூரிய சக்தி தொழில்நுட்பம் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். விவசாயம், சூரிய சக்தியால் இயங்கும் தண்ணீர் மோட்டார்கள், சுத்தமான சமையல் போன்ற புதிய வழிமுறைகளிலும் இந்த சக்தியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வாயிலாக வரும் 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தை இந்தியா உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மூலம் குறைந்த செலவில் மக்களுக்கு மின்சாரம் அளிப்பதுடன் கரியமில வாயுவின் அளவை பெருமளவில் நாம் குறைக்க முடியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம் 175 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தை தயாரிக்க கூடிய உலகின் மிகப்பெரிய அமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.

இதில் 100 ஜிகாவாட்ஸ் மின்சாரம் சூரிய சக்தியின் மூலமாகவும், 60 ஜிகாவாட்ஸ் மின்சாரம், காற்றாலைகளின் மூலமாகவும் கிடைக்கும். இந்த இலக்கில் இதுவரை சூரிய சக்தியின் மூலமாக மட்டும் 20 ஜிகாவாட் மின்சாரத்தை நாம் பெற்றுள்ளோம்.

சூரிய மின்சாரம் தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு 28 கோடி எல்.இ.டி. பல்புகளையும் இந்த அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 4 ஜிகாவாட்ஸ் மின்சாரம் மிச்சமாகியுள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அனைத்து நாடுகளும் சூரிய சக்தியின் மூலம் பயன்பெற 10 அம்ச செயல் திட்ட கையேட்டை இன்று சமர்ப்பித்த பிரதமர் மோடி, இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளுக்கு உதவிடும் வகையில் குர்கானில் உள்ள தலைமை செயலகத்தில் 500 சாளரங்கள் உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 8 =

*