;
Athirady Tamil News

18 வயது நிறைவடைந்தவர்களை உடனே வாக்காளர்களாக சேர்க்க அனுமதிக்கலாமா? – மத்திய அரசு யோசனை..!!

0

18 வயது நிறைவடைந்தவர்களை ஆண்டு முழுவதும் வாக்காளராக பதிவு செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு யோசனை வழங்கி உள்ளது.

இந்திய அரசு, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்குகிறது. இதற்காக ஒருவர் 18 வயது நிரம்பியதும் தன்னை வாக்காளராக பதிவு செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு பதிவு செய்யும் போது, அந்த ஆண்டின் ஜனவரி 1-ந் தேதிப்படி அவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

அந்த தேதிக்கு பிறகு 18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய வேண்டுமெனில் அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். உதாரணமாக 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு 18 வயதை எட்டுபவர்கள், அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

எனவே ஜனவரி 1-ந் தேதிப்படி 17 வயது மத்தியில் இருப்பவர்களும், 18 வயதை எட்டியதும் தங்களை வாக்காளராக பதிவு செய்வதற்கு சில கால வரையறையை தேர்தல் ஆணையம் ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தது. அதன்படி ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகள் பரிந்துரைக்கப்பட்டன.

இதில் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1-ந் தேதிகளை கடந்த 2016-ம் ஆண்டு தேர்வு செய்த மத்திய சட்ட அமைச்சகம், இதற்காக தேர்தல் சட்டத்தை திருத்தும் வகையில் மசோதா ஒன்றையும் தயாரித்தது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் 18 வயது நிறைவடைந்தவர்களை ஆண்டு முழுவதும் வாக்காளர் சேர்க்கைக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒருவர் 18 வயதை எட்டிவிட்டால் அவரை உடனடியாக வாக்காளராக பதிவு செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேர்தல் கமிஷனில் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள்தான் வாக்காளர்களை பதிவு செய்கின்றனர். எனவே இந்த பரிந்துரையின் சாத்தியங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − sixteen =

*