;
Athirady Tamil News

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலி – ராணுவ வீரர் தகவல்..!! (வீடியோ)

0

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி மலை. இது கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் வருடத்தில் 8 மாதங்கள் மழைப் பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இங்கு ஏலக்காய், தேயிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பசுமைப் போர்வை போர்த்தியது போல காணப்படும் இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து அமைந்துள்ள இப்பகுதியில் மலை ஏற்ற பயிற்சியும் நடைபெறும்.

நேற்று முன்தினம் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த 24 பேரும், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 12 பேர்களும் போடிக்கு வந்தனர். அவர்கள் கொழுக்கு மலையில் சுற்றுலா சென்றனர்.

பின்னர் அங்கிருந்து குரங்கணிக்கு மலை ஏறும் பயிற்சிக்கு சென்றனர். 8 பேராக பிரிந்து 4 குழுக்களாக தனித்தனியாக அவர்கள் பயணம் செய்தனர். நேற்று மாலை மலை ஏற்றத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்த போது வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது.

இதனால் மலைப்பகுதியில் திரும்பி வந்து கொண்டு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். மேலும் பலர் உயிருக்கு பயந்து கூச்சலிட்டவாறு அலறினர். வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிலர் இது குறித்து போடி மற்றும் கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். திருப்பூரைச் சேர்ந்த சஜானா (வயது 11), பாவனா (12), ராஜசேகர் (29), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மேகா (8), பிரபு (30), சென்னையைச் சேர்ந்த சகானா (20), பூஜா குப்தா (27), மோனிகா (30) ஆகியோர் காயமின்றி மீட்கப்பட்டனர்.

இந்த குழுவில் இருந்த மேகா என்ற குழந்தையின் தாய் சவிதாவை காணவில்லை. மேலும் மற்ற குழுக்களில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பற்றி எரிந்த காட்டுத் தீயுடன் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இரவு முழுவதும் நடந்த தேடுதல் பணியில் சென்னை முடிச்சூரைச் சேர்ந்த விஜயலெட்சுமி, வடபழனியைச் சேர்ந்த ஐ.ஐ.டி. நிறுவன ஆராய்ச்சியாளர் நிவேதா ஆகியோர் மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஈரோடடைச் சேர்ந்த திவ்யா, மோனிஷா, தனபால், ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலட்சுமி, இலக்கிய சந்திரன், சகானா, சுவேதா, அகிலா, ஜெயஸ்ரீ, லீகா, நிவியா, பிராக்ருதி, நிவேதா, சர்தாஸ்ரீராமன், அனுவித்யா, ஹேமலதா, சுபா, தேவி, பூஜா, மீனா ஜார்ஜ், நிஷா, திவ்யா, அருண், விபின் உள்ளிட்ட 27 பேர் மீட்கப்பட்டனர்.

லேசாக காயமடைந்தவர்களுக்கு போடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் தேனி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களைத் தவிர 5 பெண்கள் உள்பட 8 பேரை காணவில்லை. அவர்கள் உடல் கருகி இறந்திருக்கலாம் என தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர். ஏனெனில் இரவு முழுவதும் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதாலும், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருப்பதாலும் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.

இதனிடையே ஹெலிகாப்டர் மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நுரை கலந்த தண்ணீரை தெளித்து தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது.

காட்டுத் தீ குறித்து தகவல் அறிந்ததும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் மற்றவர்களையும் பத்திரமாக மீட்பதாக உறுதியளித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மலை கிராம மக்களும், தன்னார்வலர்களும் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்கியராஜ் என்பவர் தெரிவிக்கையில், வனப்பகுதியில் சிக்கியவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பணியில் அனைவரும் ஈடுபட்டோம்.

தீயில் கருகியதில் 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 15 வயது சிறுவன் என 8 பேரின் உடல்கள் வனப்பகுதியில் உள்ளதை பார்த்தேன். அவர்களின் பெயர் விபரம் தெரிய வில்லை. இது குறித்து மீட்பு படையினரிடம் தெரிவித்துள்ளோம். விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் கேரளா மற்றும் கொடைக்கானல் வனப்பகுதி வழியாக தப்பி இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் எரியும் தீ முழுவதும் அணைக்கப்பட்டால்தான் முழு விபரம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*