;
Athirady Tamil News

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முதன்முறை – தலித் எம்.பி. இன்று பதவி ஏற்றார்..!!

0

பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்-சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) 15 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேல்-சபையில் 33 இடங்களுடன் அந்தக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதேவேளையில், சிந்து மாகாணத்தில் 12 இடங்களில் 10 இடங்களை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து மாகாணத்தில் இருந்து சுறுபான்மை இனத்தவர்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டின்படி, மேல்-சபைக்கு போட்டியிட்ட இந்து தலித் இனப்பெண் கிருஷ்ண குமாரி கோஹ்லி (வயது 39) வெற்றி பெற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள முதல் தலித் இன இந்துப்பெண் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இவருடைய வெற்றி, பெண்களுக்கு மிகப்பெரிய மைல்கல்லாகவும், சிறுபான்மையினர் உரிமைக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணகுமாரி கோஹ்லி, தார் பகுதியில் நங்கர்பார்க்கர் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஒரு ஏழை விவசாய குடும்பத்தின் மகளாக 1979-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பிறந்தார்.

மூன்றாம் வகுப்பில் படித்தபோது உமர்கோட் மாவட்டத்தில் குன்ரி என்ற இடத்தில் ஏராளமான நிலங்களின் அதிபராக இருந்த ஒருவரால் கிருஷ்ணகுமாரியும் இவரது குடும்ப உறுப்பினர்களும், 3 ஆண்டுகள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

தனது 16-வது வயதில் லால்சந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தனது படிப்பை தொடர்ந்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனது சகோதரருடன் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு சமூக ஆர்வலராக இணைந்தார். தார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் பாடுபட்டு பிரபலம் அடைந்தார்,

இந்நிலையில், மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணகுமாரி கோஹ்லி உள்பட 51 உறுப்பினர்களும் இன்று பதவி ஏற்றுகொண்டனர்.

தனது குடும்பத்தாருடன் வந்து இன்று பதவி ஏற்றுகொண்ட கிருஷ்ணகுமாரி, நங்கர்பார்கர் பகுதி மக்களின் சுகாதாரம் மேம்படவும், குடிநீர் பற்றாக்குறை உள்பட பெண்கள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கவும் பாடுபடுவேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக உயர்ந்துள்ள இவரது வெற்றியை அங்குள்ள சிறுபான்மையின மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − four =

*