;
Athirady Tamil News

கிளிநொச்சியில் மூத்தோர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழாவில் முதலமைச்சரின் உரை…!!

0

????????????????????????????????????
இன்றைய தினம் கிளிநொச்சி சிவநகர்ப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூத்தோர் சங்கக் கட்டடத்தினை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

மூத்தோரைப் பேணுவோம் என்ற விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மூத்தோர் நிலையத்தை அமைப்பதற்காக ½ ஏக்கர் விஸ்தீரணம் உள்ள நிலப்பரப்பு பிரதேச செயலர் அவர்களால் வழங்கப்பட்டதாகவும் மத்திய அரசினால் கிராம அபிவிருத்திக்கென 2016 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபா இக் கட்டடத்தை அமைப்பதற்காக வழங்கப்பட்டதாகவும் அதே போன்று 2017ம் ஆண்டில் 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிதி மூலங்களுடன் சேர்த்து சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியையுஞ் சேர்த்து மூத்தோர் சங்க ஏற்பாட்டில் முன்பக்க விறாந்தை, குழாய்க்கிணறு, அதனோடு இணைந்த நீர் விநியோகக் குழாய்கள், நீர்ப்பம்பு, நிறைவுறுத்தப்படாமல் காணப்பட்ட மிகுதி வேலி போன்றவை அமைக்கப்பட்டன என்று கூறப்பட்டது.

மண் நிரப்பல், காணி துப்புரவு செய்தல் ஆகிய பல வேலைகள் மூத்தோர்களின் பங்களிப்புடன் இங்கே நிறைவேற்றப்பட்டதாக எடுத்துக் கூறப்பட்டது.

இந்தக் கட்டடத்திற்கான காற்றாடிகள், மின்சாரம் ஆகியன அகிலா நகைக்கடை உரிமையாளர் அவர்களால் மனமுவந்து இனாமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் முதியவர்களை பேணுவதற்கும் அவர்கள் மகிழ்ச்சியாக தமது கருமங்களை ஆற்றுவதற்குமாக திரு.இரகுபதி போன்றோரின் அயரா முயற்சியினால் பெறப்பட்டுள்ளன என்பதை அறியும் போது பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இங்கு வரும் அனைத்து முதியவர்களும் அவரவர்களின் பிள்ளைகளுடன், உறவினர்களுடன் அல்லது தனியாகவோ வீடுகளில் வசித்து வந்தவர்கள் தான்.எனினும் இவர்களின் முதுமைக் காலத்தைத் தனியாக இருந்து கழிப்பது சிரமத்தைத் தந்துள்ளதால்த் தான் இங்கு வந்து சேர்ந்துள்ளார்கள் என்று அறிகின்றேன்.

தொடர்ச்சியாக 50-60 ஆண்டுகள் வெளியில் திரிந்து பலவிதமான கடமைகளை ஆற்றிவிட்டு தற்போது வீட்டின் ஒரு மூலையில் முடங்கியிருந்து பேச்சுத் துணை எதுவுமின்றி முகட்டையே அண்ணாந்து பார்த்தவாறு நாள் முழுவதும் அமர்ந்திருப்பது என்பது அவர்களுக்கு இயலாத காரியம்.

பிள்ளைகளுக்கும் வளர்ந்தவர்களுக்கும் முதியோர்களுடன் அமர்ந்திருந்து அளவளாவுவதற்கோ அல்லது அவர்களின் கதைகளைக் கேட்பதற்கோ நேரமில்லை.

இந்த அவசர உலகில் பிள்ளைகள் விரும்பினாலும் அவர்களால் ஓய்வாக அமர்ந்திருக்க முடிவதில்லை. இந் நிலையில் முதியவர்களின் கேள்விகளும் குறிப்புக்களும் அவர்களை இயல்பாகவே சினமடைய வைக்கின்றன.

முதியவர்களுக்கும் பிள்ளைகளின் ஓய்வொழிச்சல் அற்ற ஓட்டங்களும் அவர்கள் சினமடைகின்ற தன்மையும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

இந் நிலையில் தான் முதியோர்கள் பராமரிக்கப்பட வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய வகையில் அவர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில்இவ்வாறான முதியோர் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையங்கள் உருவாக்கப்பட்டதின் பின் முதியவர்கள் தமது இல்லங்களில் காலைக் கடன்களை முடித்து உணவு உண்ட பின்னர் இவ்வாறான நிலையங்களுக்கு வந்துவிடுவார்கள். இந்த நிலையத்தில் ஏனைய முதியவர்களுடன் தங்கியிருந்து உரையாடுவார்கள். சிறிய தூரங்களுக்கான சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

ஆலய தரிசனப் பயணங்களை மேற்கொள்வார்கள். பூந்தோட்டங்களை உருவாக்கி அவற்றைப் பராமரிப்பார்கள். கடித உறை தயாரித்தல் போன்ற சிறு சிறு வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என அறிகின்றேன்.

மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நீங்கள் பொழுதைக் கழிப்பதற்கு இவை ஏற்ற நிலையங்களாக மிளிர்கின்றன என்று அறிகின்றேன். உங்கள் மகிழ்வு எம்மையும் மகிழ்வில் ஆழ்த்துகின்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் முதியவர்களின் சிறு சிறு வைத்தியச் செலவுகள் மற்றும் கண் சத்திரசிகிச்சைக்கான கண் வில்லை செலவு ஆகியவற்றை முதியோர் சங்க நிதியினூடாக வழங்கப்படுவதாகஅறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

இவை பொது மக்களின் நன்கொடையில் பெறப்பட்டதாக அறிந்தேன். இந்தச் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற முதியோர்கள் கடந்த வருடம் புதூர் நாகதம்பிரான் கோவில், மடு மாதா ஆலயம், திருக்கேதீஸ்வரம் ஆலயம் ஆகியவற்றிற்கு பயணங்களை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாதமும் 03 ஆம் திகதி 3.00 மணிக்கு இங்குள்ள முதியோர்களின் மாதாந்தக் கூட்டம் இங்கு சிறப்பாக நடைபெறுவதாகவும் அதில் மேற்கொள்ளப்படுகின்ற பல சிறந்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அறிந்து மகிழ்வுற்றேன்.

முன்னைய காலங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைமை எம்மிடையே காணப்பட்டது. தாத்தா, பாட்டி, பிள்ளைகள், மருமக்கள், பேரன், பேத்திகள் என அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் அமர்ந்திருப்பார்கள்.

ஏன் அவர்களின் பொருட் தேடல்கள் கூட அந்த வீட்டில் வசிக்கும் வயதான தாத்தாவிடமோ அல்லது பாட்டியிடமோ கையளிக்கப்படுவன.

அவர்கள் அப் பணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பிள்ளைகளின் தேவைக்கேற்ப அவ்வப்போது செலவிற்காகக் கையளிப்பர்.

அந்த வீட்டில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்வதாக இருப்பினும் இறுதி முடிவு தாத்தாவினுடையதாகவே இருக்கும். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை தற்போது அருகிவிட்டது.

அதில் எம்முட் பலருக்கு இஷ;டமும் இல்லை.மணம் முடித்த மகனொருவன் தான் சிறு வயதாக இருக்கும் போது தனக்கு உணவளித்து சீராட்டிப் பராமரித்த தன்தாய்க்குப் பணம் கொடுக்க விரும்புகின்றான்.

ஆனால் மருமகளுக்கோ அதில் இஷ;டமில்லை. தனது கல்வி நடவடிக்கைகளுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்த தந்தையாருக்கு உதவத்துடிக்கின்றாள் திருமணமான மகள்.

ஆனால் அதற்குப் பல இடங்களில் இருந்துந் தடைகள். இவ்வாறாக கட்டுக்கோப்புடன் வாழ்ந்து வந்தஎமது சமூகக் கட்டமைப்புக்கள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தனித்தனிக் கோணங்களில் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன.

இன்று தந்தையின் பேச்சைக்கூட பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். இந்த நிலையில் வயது போனவர்களின் நிலைமை பற்றி எடுத்துக் கூறவேண்டியதில்லை.

அம்மாவின் கைவண்ணத்தில் உருவான தேனொழுகும் பாலப்பமும் சுவையான குழல் பிட்டும் இன்று அம்மாச்சி கடையில் தான் காணக்கூடியதாக உள்ளன.

தனித்து வாழவே இன்று பலர் விரும்புகின்றார்கள். வீட்டில் சமைக்காது வீதியில் வாங்கிச் சாப்பிடவே இன்று எம்மவர் பலர் விரும்புகின்றார்கள்.

எனவே இன்றைய குழந்தைகள் எமது மரபுவழி உணவுகளை உண்ண மறுக்கின்றார்கள். பதிலாக பீட்சா,முகுஊ உணவுகள், பர்கர் (டீரசபயச)போன்ற நவீன உணவுகளில் நாட்டம் கொண்டுள்ளார்கள்.

பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியான உணவுத் தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் செய்யப்படும் நவீன உணவுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத நிலையைப் பேணுவதற்கு நூற்றுக்கணக்கான இரசாயனப் பதார்த்தங்களைப் பாவிக்கின்றன. எம்மை அறியாமலே புதிய உணவுகளினூடாக உடலுக்குள் இவை அனுப்பப்படுகின்றன.

அதன் விளைவு நீரிழிவு நோய், குருதி அழுத்தம், புற்றுநோய் என பல்வேறு வகைப்பட்ட நோய்த் தொற்றுக்களுக்கு இள வயதிலேயே எம் இளைய சமுதாயம் ஆளாக வேண்டியுள்ளது.

முன்பு சிறிய வருமானத்துடன் சிறப்பான வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட எமது முதியவர்கள் இன்று பிள்ளைகளின் அனாவசிய செலவுகள், படாடோபங்கள், வீட்டில் எந்த வேலையுஞ் செய்யாது இலத்திரனியல் உபகரணங்களுடன் பொழுதைப் போக்குந் தன்மை கண்டு மனம் வெதும்புகின்றார்கள்.

விளைவு வீட்டில் அனைவரின் கண்டிப்புக்கும் முதியவர்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இதனைத் தலைமுறை இடைவெளி என்று கூறுவார்கள். புநநெசயவழைn பயி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.

இதன் பொருட்டுத் தான் இவ்வாறான முதியோர் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பகற்பொழுது முழுவதையும் இவ்வாறான நிலையங்களில் கழிப்பதன் மூலம் முதியவர்களும் மகிழ்ச்சியடைகின்றார்கள்.

வீட்டிலுந் துன்பச் சூழ்நிலைகள் குறைக்கப்படுகின்றன.

எனவே அன்பார்ந்த முதியவர்களே! உங்கள் முதுமைக்காலம் சிறப்பாக அமையவும் உங்கள் முயற்சிகள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கவும் உங்கள் திறமைகள் ஏனையோருக்கு உதவவும் இத் தருணத்தில் வாழ்த்துவதுடன் நீங்கள் அனைவரும் இன்னும் பல காலம் சுகதேகிகளாக வாழப் பிரார்த்தித்து இந்த நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியறிதலையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − six =

*