;
Athirady Tamil News

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ஜப்பான் சந்திப்புக்களில் ஞானாசார தேரர்..!!

0

ஸ்ரீலங்காவில் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டிய நிலமைக்கு தள்ளிய கண்டி இன வன்முறைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானாசார தேரர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி டோக்கியோவில் ஜப்பானில் வாழும் ஸ்ரீலங்கா சமூகத்தினரை சந்தித்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஸ்ரீலங்கா சமூகத்தினரை சந்திக்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் வரிசையில் ஞானாசார தேரரும் இருந்ததைக் கண்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாக ஜப்பானிலுள்ள ஸ்ரீலங்காவைச் சேர்ந்த வர்த்தக சமூகத்தினரும் தொழில்சார் நிபுணர்களும் ரேடியோககன டொட் கொம் என்ற எமது சகோதர ஊடகத்திற்கு தெரிவித்திருக்கின்றனர்.

ஜப்பான் சென்றுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஜப்பானிய தலைநகர் டோக்கியோவிலுள்ள இம்பிரியல் நட்சத்திர வீடதியில் வைத்து ஸ்ரீலங்கா சமூகத்தினரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுஅ னுப்பி வைத்திருந்த காணொளியில் எந்தவொரு இடத்திலும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானாசார தேரர் இருக்கவில்லை.

அவரது காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட ஜப்பானில் வாழும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த வர்த்தக மற்றும் தொழில்சார் நிபுணர்கள் சிலர் ரேடியோககன டொட் கொம் என்ற எமது சகோதர இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் குறித்த சந்திப்பில் ஞானாசார தேரரை கண்டு தாங்கள் அதிர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி இனவாதத்தை ண்டிவரும் பௌத்த பிக்கு ஒருவருடன் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பது கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியிலும் வியப்பிலும்ஆழ்ந்துவிட்டதாக வர்த்தகப்பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

கண்டி இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட மறுநாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதியை மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்திருந்த கலகொட அத்தே ஞர்னாசார தேரரை ஸ்ரீலங்கா ஜனாதிபதி கலந்துகொண்ட தர்மத்தை போதிக்கும் மேடையில் எவ்வாறு அமர வைத்தனர் என்று கேள்வி எழுப்பிய அந்த வர்த்தகர் இந்த செயல்கள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் சதிகளின் ஒரு அங்கங்கள் என்றும் விசனம் வெளியிட்டார்.

ஞானாசார தேரரின் வருகை தொடர்பில் ஜப்பானிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகம் அறிந்திருக்காதிருக்க வாய்ப்பே இல்லை என்றும் மற்றுமொரு வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மனுவொன்றையும் ஜப்பானில் வாழும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

ஸ்ரீலங்காவிற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ஜப்பானிய விஜயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் இணைந்துகொண்டிருந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*