;
Athirady Tamil News

இனப்படுகொலை மீண்டும் தலை துாக்கியுள்ளது – கோடீஸ்வரன்…!!

0

ஸ்ரீலங்காவில் சிறுபான்மை இனத்திற்கு எதிராக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் தலை துாக்கியுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த கலாசார விழா நேற்று வியாழக்கிழமை கல்முனை – உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினுடைய அரசாங்கம் பொறுப்புக்கூறலில் இருந்து எந்த நிலைப்பாட்டில் விலகி நடந்தார்களோ அந்த நிலைப்பாட்டைத்தான் இன்றைய நல்லாட்சி அரசும் மேற்கொண்டு வருவதாக கவலை வெளியிட்டார்.

ஸ்ரீலங்காவில் சிறுபான்மை இனத்திற்கு எதிராக குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனிதப்படுகொலைகள் என்பன பேரினவாதிகளினால் கடந்த காலங்களில் மிகமோசமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன படுகொலை என்பது தனிமனித இன அழிப்பு மாத்திரமல்ல கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம் மற்றும் எமது சமூக ரீதியான விடயங்களை முன்னெடுப்பதனை மழுங்கடிப்பதும் ஒரு இனரீதியான அழிப்பாகத்தான் காணப்பட்டது.

இந்த செயற்பாடு நீண்டு கொண்டு செல்கின்றது என்பதற்கு ஸ்ரீலங்காவில் மிக அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளே போதுமானது என சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ அதே போன்றதொரு நிலைதான் இன்று முஸ்லிங்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்றது.

அத்தோடு ஸ்ரீலங்காவை பொறுத்தவரையில் தற்போது சட்டம், ஒழுங்கு என்பன கேள்விக் குறியாகிப்போய்க்கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதில் மீண்டும் தவறிழைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து ஐ.நா சபையில் தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலுக்கு சிறுபான்மை சமூகம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயம் சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாகவும் தெரிவித்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,

தமிழர்களது உரிமைகள் கலை,கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள் என்பன முற்றுமுழுதாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு இதற்கு அனைத்து தமிழ் உறவுகளும் உறுதுனையாக இருந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + six =

*