பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்குதேசம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! (வீடியோ)

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டதால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாபஸ் பெறலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
இதனை அடுத்து, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது மத்திய மந்திரி பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்திருந்தனர். அதேபோல, ஆந்திர அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
கடந்த சில நாட்களாக இவ்விவகாரம் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு தொடர் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அந்த கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டால், தெலுங்கு தேசம் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
தெலுங்கு தேசமும் புதிதாக ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.