;
Athirady Tamil News

பிரிட்டன் தூதர்களை வெளியேற்ற ரஷியா முடிவு..!!

0

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என பிரிட்டன் கோரியது. அமெரிக்க அதிபர் டிரம்பும் இவ்விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக உள்ளார்.

ஆனால், பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷியா, இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதனால், ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பு என பிரிட்டன் உறுதியாக தெரிவித்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷிய அரசுதான் கொலைமுயற்சி குற்றவாளியாக அறிவித்தார்.

ரஷியா உடனான உயர்மட்ட தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை நான் ஏற்கிறேன். ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ் பிரிட்டன் வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே கூறினார்.

பிரிட்டனில் உள்ள ரஷியா நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராக நீங்களும் ரஷியாவில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கி லாவ்ராவ், ‘நிச்சயமாக நாங்கள் வெளியேற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − ten =

*