;
Athirady Tamil News

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு ஜெனிவா விஜயம்…!!

0

ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன தலைமையில் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் 21 ஆம் திகதி புதன்கிழமை ஸ்ரீலங்கா விவகாரம் ஆராயப்படவுள்ள நிலையிலேயே அதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சருடன் விசேட அலுவல்களுக்கான அமைச்சம் கலாநிதி சரத் அமுனுகமவும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனீவா பயணமாகவுள்ளனர்.

ஜெனீவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் மார்ச் 21 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள அமர்வில் ஸ்ரீலங்கா விவகாரம் ஆராயப்படவுள்ளது.

இந்த அமர்வின் போது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் உட்பட நீதிக்கான நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது தொடர்பில் கடுமையான அறிக்கையொன்றை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் வெளியிடவுள்ளார்.

எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்க எதிரான கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு எதிராக அந்ததந்த நாடுகளில் வழக்குத் தொடரலாம் என்றும் ஆணையாளர் பரிந்துரை செய்திருந்தார்.

இந்த நிலையில் மார்ச் 21 ஆம் திகதி புதன்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரின் ஸ்ரீலங்கா குறித்து ஆராயும் அமர்வில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படலாம் என்று நம்பப்படுவதால் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது உயர்மட்ட பிரதிநிதிகளை அனுப்பத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, விசேட அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசின் இணை அணுசரனையுடன் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 34 ஒன்று தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கபடவுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துவதற்காகவே எதிர்வரும் திங்கட்கிழமை 19 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன தலைமையில் பிரதிநிதிகள் குழு ஜெனீவா செல்லவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*