சிரியாவில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி..!!

ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டின்பேரில் தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் அரசுப் படைகள் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர்.
இதேபோல், கிழக்கு கவுட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். இதனால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் தொலைத்துவிட்டு, உயிருக்கு பயந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், கவுட்டாவின் கிழக்கு பகுதியில் விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் அங்கிருந்த வெளியேற வரிசையில் நின்றிருந்த 30 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் சிரியாவின் உள்நாட்டுப் போர் நிலவரங்களை கண்காணித்துவரும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.
2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.