;
Athirady Tamil News

பிரசவத்தில் பலியான இளம்பெண்ணின் உடல் உருப்புகள் 6 பேருக்கு தானம்..!!

0

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் அய்யப்பன். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி தனலெட்சுமி (வயது 25). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

8 மாத கர்ப்பிணியாக இருந்த தனலட்சுமி கடந்த 7-ந் தேதி உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு தொடர் வலிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து மேல் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தனலட்சுமி மூளைச்சாவு அடைந்தார். இதனை உறுதி செய்த டாக்டர்கள் தனலட்சுமியின் உடல் உறுப்புகளை தானம் வழங்கினால் அதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினரிடம் எடுத்து கூறினர். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனை டீன் அனிதா மேற்பார்வையில், தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கருணாகரன் தலைமையில் அறுவை சிகிச்சைக் குழு உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தனலட்சுமியின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் , 2 கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இதில் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கல்லீரல் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கும், மற்றொன்று நெல்லை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 2 கண்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் 6 பேர் வாழ்வு பெற்றனர்.

இதுவரை திருச்சியில் உடல் உறுப்புகள் தானம் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மட்டும் நடந்து வந்தது. இப்போது முதன் முறையாக திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மையத்தை திறக்க வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும் போது, தற்போது அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்து வமனைகளிலும் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் தானம் பதிவு மூப்பு அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை.

தஞ்சை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் தலா ரூ.15 கோடி செலவில் புற்றுநோய் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி இருப்பதால் விரைவில் திருச்சியிலும் புற்றுநோய் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*