தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதிக்கு விருப்பம்…!!

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ்மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிா்க்கட்சி தலைவா் இரா.சம்பந்தன் தெரிவித்தாா்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தனிநாட்டைக் கேட்கவில்லை தங்களது பிரச்சினையை தனிநாட்டுக்குள் பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குளே தீர்க்கவே தமிழ் மக்கள் விரும்பகின்றனர்.ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
நாட்டை இப்படியே கொண்டு செல்ல முடியாது. நாடு மிகப்பெரிய துன்பங்களையும் பொருளாதார பின்னடைவையும் சந்தித்துள்ளது.இலங்கையை விட பின்தங்கியிருந்த பல நாடுகள் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது.
உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. இந்த நிலையில் ஜனாதிபதி தான் எதிர்கொள்கின்ற சவால்களில் இருந்து மேலெழ வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.
ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ்மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஜனாதிபதி செய்வாராக இருந்தால் சர்வதேச சமூகம் அவரை உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என்று அங்கீகரிக்கும்.
எனவே காலதாமதம் இன்றி ஜனாதிபதி தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.