;
Athirady Tamil News

பிரிட்டன் நாட்டு பெண்மணிக்கு உலகின் சிறந்த நல்லாசிரியர் விருது – ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்பட்டது..!!

0

உலகில் உள்ள பெரும் செல்வந்தர்கள் ‘கிவிங் பிலெட்ஜ்’ என்ற இயக்கத்தின் மூலம் தங்களது சொத்துகளில் சரிபாதியை தர்ம காரியங்களுக்கு கொடையாக அளித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் பிரபல தொழிபதிபர் வாரன் பஃபெட், மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோரை அறங்காவலர்களாக கொண்டிருக்கும் ‘கிவிங் பிலெட்ஜ்’ அமைப்புக்கு பிரபல ஹாலிவுட் நடிகர், நடிகைகள், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், இந்தியாவை சேர்ந்த விப்ரோ குழுமத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட உலகின் 136 பெரும் செல்வந்தர்கள் இந்த நல்ல நோக்கத்துக்காக தங்களது சொத்தின் பெரும்பகுதியை தானம் செய்துள்ளனர்.

இந்த வரிசையில் கேரளாவில் பிறந்து, துபாயை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறந்து நிர்வகித்துவரும் சன்னி வர்க்கி தனது சொத்துகளில் சரிபாதியை உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு உதவிடும் நோக்கில் தானமாக வழங்கியுள்ளார்.

இவருக்கு சொந்தமான ஜெம் பவுண்டேஷன் பள்ளிகளில் உலகின் 153 நாடுகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதுதவிர சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்-ஆசிரியைகள் இவரது பயிற்சி பள்ளியில் படித்து பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

இந்த ஆசிரியர்-ஆசிரியைகளை கொண்டு சுமார் ஒரு கோடி பிள்ளைகளின் கல்வியறிவை மேம்படுத்தும் விதமாக தனது சொத்தின் சரிபாதியை தானம் செய்வதாக ‘கிவிங் பிலெட்ஜ்’ ஒப்பந்தத்தில் சன்னி வர்க்கி கடந்த 2013-ம் ஆண்டு கையொப்பமிட்டார்.

வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த ஆசிரியராக ஒருவரை தேர்வு செய்து 10 லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப்பரிசாக வழங்கி ஆசிரியர் சமூகத்தை இவர் கவுரவித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த (2017) ஆண்டில் உலகின் சிறந்த ஆசிரியர் விருதுக்காக ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, கென்யா உள்ளிட்ட 170 நாடுகளை சேர்ந்த ஆசிரியர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. இந்தப் பெயர்களையும், கல்விக்காக அவர்கள் ஆற்றிய தொண்டுகளையும் பரிசீலித்த தேர்வுக் குழுவினர், இறுதியாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆசிரியையான ஆண்டிரியா ஸபிரக்கோவ்(39) என்பவரை இந்த சிறப்புமிக்க பரிசுக்கு தேர்வு செய்தனர்.

கிரேக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட ஆண்டிரியா ஸபிரக்கோவ், பிரிட்டன் நாட்டில் உள்ள இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் பரோ ஆஃப் பிரென்ட் பகுதியில் அமைந்துள்ள ஆல்பெர்ட்டன் கம்யூனிட்டி பள்ளியில் கலை மற்றும் ஜவுளித்துறை வடிவமைப்பு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இங்கு சுமார் 130 மொழிகளை பேசும் 1350 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இங்கு படித்துவரும் பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட பிள்ளைகளுக்கு விளையாட்டு, இசை மற்றும் கலை வகுப்புகளின் மூலம் மேம்பாடு அடைய ஆசிரியை தொழிலின் வாயிலாக சேவை செய்து வருவதற்காக இவ்விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் நேற்று நடைபெற்ற விழாவில் உலகின் சிறந்த நல்லாசிரியர் விருதையும், பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப் பரிசையும் ஆண்டிரியா ஸபிரக்கோவுக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் அல் கோர், பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் ஜுலியா கில்லார்ட், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்பட உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த உயரிய விருது பெற்ற ஆசிரியை ஆண்டிரியா ஸபிரக்கோவை வாழ்த்தி பிரிட்டன் பிரதமர் தெரசா மே வீடியோ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

இந்த விருதுக்கு தன்னை தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துய் ஏற்புரையாற்றிய ஆண்டிரியா ஸபிரக்கோவ், பள்ளி மாணவ-மாணவி பருவத்தில் பிள்ளைகளுக்கு வலி அளிக்கும் விவகாரங்கள் மற்றும் அவர்கள் தங்களது வாழ்வில் இழந்ததாக கருதும் மகிழ்ச்சியை தங்களது பள்ளி அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 10 =

*