;
Athirady Tamil News

எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கு நேர்மையான அரசியல்வாதிகள் நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி..!!

0

அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டு வருகின்றனர். நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதோ அல்லது தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதோ அவர்களுக்கு முக்கியமானதாக இல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டைப் பற்றி சிந்திக்காது அரசியல் அதிகாரம் பற்றி மட்டுமே சிந்திக்கும் அத்தகையவர்களை மக்கள் சரியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு குறிப்பிட்டார்.

இதன்போது பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வுகளும் இன்று முற்பகல் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்மீது வைத்த நம்பிக்கையை தான் ஒருபோதும் மீறவில்லை என்றும், அக்கொள்கையை தான் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தபோதும் எதிர்காலத்திலும் அக்கொள்கையில் மாற்றங்களை செய்வதற்கு தான் தயாராக இல்லையென்றும் தெரிவித்தார்.

நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கு நேர்மையான அரசியல்வாதிகள் நாட்டுக்கு தேவையென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டை நேசிக்கின்றவர்களாக செயற்படுங்கள் என்று அனைத்து அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் தனியார் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப நிலையத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அந்நிலையத்தை சுற்றிப் பார்வையிட்டார்.

அதன் பின்னர் நடைபெற்ற வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் 10 பேர்களுக்கான நியமனங்களை வழங்கி ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டு மக்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

கற்றவர்கள் அதிகரிக்கின்றபோது நாட்டில் பிர்ச்சினைகள் குறைவடையும் என்பதுடன் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக மக்களுக்கு தேவையான கல்வியை வழங்குவது அரச மற்றும் அரசசார்பற்ற கல்வி நிறுவனங்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.

இலவசக் கல்வியை பலப்படுத்துவதன்றி அதனை ஒருபோதும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும், புதிய கல்விகொள்கையின்படி செயற்பட வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி;, தற்போதைய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான நிலைமையை மாற்றியமைத்திருப்பதாக தெரிவித்தார்.

தொழில்நுட்ப பாடங்களுடன் கூடிய பட்டதாரிகளுக்கு ஜப்பானில் பல்வேறு தொழில்வாய்ப்புகள் உள்ளன என்றும் இதற்கு இலங்கை பட்டதாரிகளை அனுப்புவதற்கு தான் அண்மையில் மேற்கொண்ட ஜப்பான் விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித், யாழ்ப்பாண ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் ஆகியோர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதேநேரம் வடமாகாண தலைமை சங்கநாயக்க தேரர் ஸ்ரீநாக விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஞானரத்ன தேரர் மறைந்து மூன்று மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இளம் பிக்குகள் மற்றும் யாழ்ப்பாண சர்வ சமய ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − thirteen =

*