;
Athirady Tamil News

9 மாகாணங்களும் சமஷ்டிக்குள் வர வேண்டும் – விக்னேஸ்வரன்…!! (படங்கள்)

0

முழு நாட்டையும் உள்நாட்டு மொழி ஒன்றே இணைக்க வேண்டும் என்றிருந்த அரசியல்வாதிகளின் எண்ணம் இன்று வரை கைகூடவில்லை மாறாக இனங்களிடையே சந்தேகங்களையும் புரிந்துணர்வற்ற நிலைமையையுமே கொண்டு வந்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் தத்தமது அடையாளங்களுடன் சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்குவதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றால் இணைப்பு மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். ஒன்பது மாகாணங்களும் சமஷ்டி அமைப்பினுள் அடங்க முன் வரவேண்டும். எமது தமிழ்ப் பேசும் மாணவ மாணவியர் ஒரு மொழியிலும் சிங்கள மாணவ, மாணவியர் இன்னோர் மொழியிலும் பாண்டித்தியம் பெற்றால் அவர்களுக்குள் அந்நியோன்யமான கருத்துறவாடல்கள் குறைவாக இருக்கும்.

புரிந்துணராமையும் சந்தேகங்களுமே அவர்கள் உறவில் மிஞ்சுவன. கட்டாயமாக இணைப்பு மொழிப் பாண்டித்தியம் உருவாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் அறிஞர்களும் இணைந்துகொண்டு இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இவ்விடயம் அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். வருங்காலத்தை உணர்சியின் அடிப்படையில் அமைக்காது அறிவு சார்ந்ததாக அமைக்க அனைவரும் முன்வர வேண்டும்.

ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் ஒன்றை முடித்துக் கொண்டு வந்த ஜனாதிபதி இந் நிகழ்விற்கு வருவாரோ என்ற சந்தேகம் இருந்தது. சிரமம் பாராது, தான் முன்னர் வாக்களித்தது போல், இந்நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பது எமக்குப் பெருமையையும் மகிழ்வையும் நல்குகின்றது.

புனித பத்திரிசியார் கல்லூரி நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு கல்லூரி. இக் கல்லூரியில் கல்விகற்ற பல மாணவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளாகவும், அமைச்சர்களாகவும், அருட்தந்தைகளாகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களாகவும் இன்னும் பல உயர் பதவிகளிலும் சிறப்புற விளங்கியிருக்கின்றார்கள். எமது எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூட இரண்டு வருடங்கள் இக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறான பழைய மாணவர்களுள் பல சிங்கள மாணவர்களும் அடங்கியிருந்தனர்.

1850 ஆம் ஆண்டளவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளின் வருகையினைத் தொடர்ந்து குருநகர்ப் பகுதியில் இத்தாலிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையினரால் இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

ஆங்கிலக் கல்வி அறிவுகளுடன் சேர்த்து கத்தோலிக்க மதப் பரம்பல்களை மேற்கொள்வதற்காக இங்கு வருகை தந்தவர்கள் இப் பகுதிகளில் கல்வி அறிவு மேம்படுவதற்காக பல பாடசாலைகளை அமைத்து ஆங்கில மொழி மூல கற்கை நெறிகளை உருவாக்கித் தந்தமை மகிழ்வுடன் நினைவுகூரப்படுகிறது.

அன்று அவர்களாலும் தொடர்ந்து வந்த தென்னிந்திய திருச்சபை மற்றும் அமெரிக்க திருச்சபைகளாலும் அமைக்கப்பட்ட பலதரப்பட்ட பாடசாலைகளே வடபகுதித் தமிழ் மக்களை ஆங்கிலப் புலமையிலும் மற்றும் கல்வி கேள்வி அறிவுகளிலும் சிறந்து விளங்க வழி சமைத்தது என்றால் மிகையாகாது.

நாம் ஆங்கில மொழியிலும் கல்வியிலும் மேம்பட்டதாலேயே அப்போது ஆங்கிலேயர் பல தமிழர்களை அரசாங்க சேவைக்குள் உள்ளேற்றனர். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதும் எமது ஆங்கிலப் புலமையையும் கல்வி அறிவையும் மழுங்கடிப்பதற்காக 1956 ஆம் ஆண்டில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

தனித் தாய்மொழிக் கற்கையானது ஆங்கிலத்தை மறக்கச் செய்தது.

தாய்மொழிக் கற்கை முறைமை சிறப்பானதே. ஆனால் இடைத்தர நிலைகளிலிருந்து உயர் நிலைக்கல்விக் கூடங்களுக்கு மாணவ மாணவியர் செல்கின்ற போது ஆங்கிலக் கல்வியின் அத்தியாவசியம் உணரப்படுகின்றது. இன்றும் கூட கல்வி அறிவுகளில் மிகவும் மேம்பட்ட பலர் ஆங்கில மொழித் தேர்ச்சி சிறப்பாக இல்லாமையால் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதில் சிரமமடைவதை நான் காணும் போது மிகுந்த மன வேதனை அடைகின்றேன்.

நான் முதன் முதலில் 1971 ஆம் ஆண்டில் சட்டத்தைத் தமிழில் கற்பித்த போது தமிழில் சட்ட நூல்கள் எதுவும் இங்கு இருக்கவில்லை. மாணவ மாணவியர் எனது சட்ட விரிவுரைக் குறிப்புக்களை மட்டுமே பரீட்சையின் போது ஒப்புவித்தார்கள். உசா நூல்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே இருந்தன. அவர்களின் ஆங்கில அறிவு படிப்படியாகக் குறைந்து வந்ததையும் அவதானித்தேன். தாய்மொழிக் கல்வியுடன் சேர்த்து ஆங்கிலக் கல்வியையும் இறுக்கமாக கற்பித்திருந்தால் தமிழில் படித்தவர்கள் ஆங்கில உசா நூல்களையும் அலசி ஆராய்ந்திருப்பார்கள். இந்த இடைவெளி வந்திருக்காது.

அக் கால அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட்ட சில பொருத்தமற்ற முடிவுகள் காரணமாக ஆங்கிலமொழிக் கற்கை படிப்படியாகக் குறைந்து இன்று ஆங்கில பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள்கூட இல்லாமற்போய்விட்ட நிலையே காணப்படுகின்றது. எனினும் காலம் கடந்ததெனினும் இதனை உணர்ந்து கொண்ட அரசும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் போன்றவர்களும் முன்னெடுக்கின்ற காத்திரமான சில முன்னெடுப்புக்கள் காரணமாக ஆங்கில மொழி அறிவுத்திறன் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

அன்று ஆங்கிலக்கல்வி இலங்கையிலுள்ள அனைத்து இனங்களையும் இன மத வேறுபாடுகளின்றி இலங்கையர் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் இணைத்தது. அதே போன்ற ஒரு நிலை மீண்டும் மலர வேண்டும். அதன் பொருட்டே இணைப்பு மொழி என்று ஆங்கில மொழியானது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்படுகின்ற இந்த தொழில்நுட்ப மையம் இக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கும் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவுமென எண்ணுகின்றேன்.

இக் கல்லூரி அரச நன்கொடையைப் பெற்று இயங்குகின்ற ஒரு தனியார் பாடசாலையாக விளங்குவதால் நிரந்தர ஆசிரியர்களின் சம்பளக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக எந்தவொரு அரச கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது.

எனினும் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த நவீன கட்டடத்திற்கான முழுச் செலவும் பழைய மாணவர் அமைப்புக்களினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகள் பலவற்றிலிருந்து பழைய மாணவர்கள் பலர் இங்கு வந்திருப்பதாகவும் அறிந்துகொண்டேன்.

அதுமட்டுமல்லாது இக்கட்டட வேலைகளை நேரடியாக கண்காணிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து லோகன் சவிரிமுத்து என்ற பழைய மாணவர் ஒருவர் இங்குவந்து தங்கியிருந்து இவ் வேலைகளைத் திறம்பட நிறைவேற்றி கொடுத்துள்ளார் என்றும் அறிகின்றேன்.

எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் எமது உறவுகள் காட்டுகின்ற பரிவும் அக்கறையும் வரவேற்புக்குரியது. இவர்களின் இவ் வகையான உதவிகளை இங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் முறையாக பயன்படுத்தி கல்வி கேள்வி அறிவுகளில் சிறந்தவர்களாகி எதிர்கால தலைவர்களாக அவர்கள் மிளிர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை இக்கல்லூரியின் முன்னைய அதிபரும் அத்துடன் இக் கல்லூரி நிர்வாகத்தின் முகாமையாளருமாவார்.

அவரின் ஆசீர்வாதத்திற்கு உட்பட்ட கல்லூரியாக விளங்கும் புனித பத்திரிசியார் கல்லூரி எதிர்காலத்திலும் சிறப்பான பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்று யாழ்.மாவட்டத்திலுள்ள புகழ்பூத்த கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகத் தொடர்ந்து திகழ எனது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eighteen =

*