ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா.சபை இரங்கல்..!!

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக பாராளுமன்றத்தில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவர்களில் 38 பிரேதங்களில் நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனை ஈராக் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருநபரின் அடையாளம் 70 சதவீதம் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுஷ்மா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மோசூல் நகரில் 39 இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது.
மோசூல் நகரில் 39 இந்தியர்கள் கடத்திக் கொல்லப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது மற்றும் கொடூரமானது என ஐ.நா.வில் உள்ள ஈராக் சிறப்பு தூதர் ஜான் குபிஸ் தெரிவித்தார்.
மேலும், ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என ஐ.நா. பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.