;
Athirady Tamil News

ஆரியதாச குரேயின் பதவி நீக்கத்திற்குப் பின்னால் பாரிய சதி…!!

0

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரேயின் பதவி நீக்கத்திற்குப் பின்னால் பாரிய சதித்திட்டமொன்று இருப்பதாக நீதிக்கும் நியாயமுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கெபே அமைப்பும் – ஸ்ரீலங்கா மனித உரிமைகள் கேந்திர நிலையமும் குற்றம்சாட்டியுள்ளன.

கண்டி மாவட்டத்தின் திகன – தெல்தெனிய பகுதிகளில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுடன் பொலிசாருக்கு இருக்கும் தொடர்புகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்த நிலையிலேயே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து ஆரியதாச குரே அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதாக இந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கண்டி மாவட்டத்தின் திகன – தெல்தெனியா பகுதிகளில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் குறித்து விசாரணையொன்று நடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அரசியல் தலைமைகள் கொடுத்த அழுத்தங்களை அடுத்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரேயின் பதவி நீக்கப்பட்டிருப்பதாக கெபேயின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிசாரின் கவனயீனம் மற்றும் பொறுப்பை நிறைவேற்றத் தவறியமை ஆகிய விடையங்கள் காரணமாகவே தெல்தெனிய – திகன பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகள் மோசமடைந்தன என்பது அனைவரும் அறிந்த விடையம் என்று தெரிவிக்கும் தென்னகோன், இந்த நிலையிலேயே பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை கையளிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் செயலாளர் கோரியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொலிசார் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே குரே அறிக்கையொன்றை கோரியிருந்ததாகவும் தெரிவித்துள்ள கீர்த்தி தென்னகோன் எனினும் அரசாங்கத்திலுள்ள ஏனைய தலைவர்கள் இதனை விரும்பாது விசாரணைகளை தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*