;
Athirady Tamil News

அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி கடிதம்..!! (படங்கள்)

0

அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இன்று அனுப்பப்பட்டுள்ள இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டமையே நாடு இந்த நிலைக்கு வருவதற்குக் காரணம் என்பதையும், இந்த நிலைக்கு மாறிமாறி இந்த நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் இரண்டும் பொறுப்பேற்க வேண்டியவை என்றும் தாங்களே ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். மேலும் பிரதமரும் உங்களின் கருத்தை ஆமோதித்திருந்தார்.

ஒரு தேசிய இனத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை முதலீடாக வைத்தே இந்த நாட்டில் ஆட்சி அதிகாரங்கள் கைமாறி வந்துள்ளன என்பதை தாங்களும் உணர்ந்துள்ளீர்கள் என்பது தங்களது கூற்றின்மூலம் நிரூபணமாகிறது.

நாட்டின் அபிவிருத்தி, சட்ட ஆட்சி, அனைவருக்கும் சம உரிமை என்பவற்றை முன்னிலைப்படுத்தி ஆட்சி புரிவதற்குப் பதிலாக இவை அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு எத்தகைய பொறுப்பணர்ச்சியும் இன்றி ஒரு தேசிய இனத்தின்மீதான கட்டுக்கடங்கா அடக்குமுறையை ஏவிவிட்டு நாட்டு மக்களை மாயைக்குள் சிக்கவைத்து ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டும் பகையுணர்ச்சியுடனும் நோக்கும் நிலையை ஏற்படுத்தியதன் விளைவே இன்று நாடு மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம் என்பதையும் தாங்களே கூறிவருகின்றீர்கள்.

ஆட்சியாளர்களின் கொள்கை முடிவை ஏற்று சட்டத்தைத் தங்களது கைகளில் எடுத்துக்கொண்ட பாதுகாப்புத் தரப்பினர் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தமிழ் தேசிய இனத்தை அச்சுறுத்தி வந்தமையும் கடத்தி கொலைசெய்து வந்தமையும் தங்களுக்குத் தெரியாததல்ல.

தங்களைக் கொலைசெய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தவரையே நீங்கள் மன்னித்து விடுதலை செய்து அவரை குடும்பத்தினருடன் இணைத்தவர்.

ஒரு சிறுமி தங்களை தனது வீட்டிற்கு வருமாறு விடுத்த அழைப்பை ஏற்று அந்த ஏழைச்சிறுமியின் வீட்டிற்குச் சென்று அந்தச் சிறுமியை மனம்குளிரச் செய்தவர். எங்கு சென்றாலும் சிறுபிள்ளைகளை வாரி அணைத்து கொஞ்சி மகிழ்வதில் இன்பம் காண்பவர் நீங்கள்.

அப்படிப்பட்ட உங்களால் சமீபத்தில் கிளிநொச்சியில் ஒரு சிறுமி தனது தாயை இழந்து தனயன் தாயின் உடலுக்கு கொல்லி வைக்க போகையில் அநாதரவான நிலையில் தந்தையுடன் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய காட்சியை தங்களால் இரசிக்க முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

பங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் பத்தாண்டுகளாக தடுப்பிலிருந்த சண்முகநாதன் தேவகன் என்பவர் விடுதலைப் புலிகளுக்கு வாகனம் கொள்வனவு செய்து கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் விடுதலை ஆகப்போகிறோம் என்று எண்ணி மகிழ்கையில் அவர்மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இதனால் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்புக்குள்ளான அவர் சுகவீனமுற்ற நிலையில் தனது எழுபது வயது மனைவியையும் ஒரு மகளையும் தவிக்கவிட்டுவிட்டு மரணித்திருக்கிறார். அவரது காணியும் தற்பொழுது பிரச்சினையில் இருக்கிறது.

அவரது குடும்பப் பிண்ணனி, சமூகத்தில் அவர்களின் மதிப்பு அவர்களின் மனிதாபிமானம் அவர்களது வயது என்பவை கணக்கில் கொள்ளப்படாமை எமக்கு மிகுந்த மனக்கவலையை அளிக்கிறது.

இதனைப் போன்றே கிளிநொச்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் மனைவி யோகராணி கணவனைப் பிரிந்த சோகத்தினாலும் குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத வறுமையினாலும் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகி இரண்டு பிள்ளைகளை நிர்க்கதியாக்கிவிட்டு தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டுள்ளார்.

ஆண்பிள்ளை தாய்க்கு கொல்லிவைக்கச் செல்ல பெண்பிள்ளை செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏற முற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த காவல்துறையினரையே கண்கலங்கச் செய்திருக்கிறது.

இனியேனும் இத்தகைய சோகக் கதைகள் தொடராமல் இருப்பதற்கு தாங்கள் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாம் பலமுறை பாராளுமன்றத்தில் தெரிவித்து வந்துள்ளோம்.

எமது கோரிக்கைகள் உதாசீணம் செய்யப்பட்டதன் விளைவே மேற்கண்ட மரணங்கள் சம்பவிக்கக் காரணம் என்பதையும் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

கடத்தி கப்பம்கேட்டு அந்தக் கப்பத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரும் கொலைசெய்த படையினரை பிணையில் செல்ல அனுமதித்த அரசாங்கத்திற்கு அரசியல் காரணங்களுக்காக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிப்பதில் தயக்கம் காட்டுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

எனவே இனியும் தாமதமின்றி மனிதாபிமானமிக்கவராகவும் குழந்தைகளின்மீது அன்பு செலுத்துபவராகவும் திகழும் தாங்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து தங்களது நற்பெயரையும் நாங்கள் தங்களுக்கு வழங்கிய ஆதரவிற்கு கௌரவமளிக்கும் வகையிலும் செயல்படுவீர்கள் என்று நாம் நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 17 =

*