;
Athirady Tamil News

நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா அசமந்தம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசனம்…!!

0

யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் அசமந்தமாக இருப்பது குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா அரசு பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் ஸ்ரீலங்கா அரசு பெருமிதம் வெளியிட்டிருக்கின்றது.

பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு தண்டனைகளில் இருந்து தப்பிச் செல்வதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தொடர்பில் கரிசணைகளை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள் உட்பட உறுப்பு நாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் குறித்தும் அதிக அக்கறையை வெளிப்படுத்தியிருந்தன.

உண்மை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மீள் நிகழாமை தொடர்பில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி வரை ஸ்ரீலங்கா அரசு அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரின் மார்ச் 21 ஆம் திகதி அமர்வில் ஆராயப்பட்டது.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்கா அரசின் இணை அணுசரனையுடன் நிறைவேற்றப்பட்டட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரின் போது மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசின் உறுதிப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் பேரவை பெரும் சந்தேகத்தை வெளிப்படுத்தியது.

ஸ்ரீலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிப்பது, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மற்றும் தொடரும் குற்றவாளிகளுக்கான தண்டனை முக்தி நடைமுறைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நார்பில் அவரது அறிக்கையை நேற்றைய அமர்வில் வாசித்த மனித உரிமைகள் துணை ஆணையாளர் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.

நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை ஸ்தாபிப்பது தொடர்பில் நிலவும் மந்தமான நிலை குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம் என மனித உரிமைகள் துணை ஆணையாளர் கேட் கில்மோர் அறிவித்துள்ளார்.

உரிய பலன்களோ, பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் நிறைவேறாத நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பது – ஒன்று தீர்மானத்திற்கு அமைய ஸ்ரீலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நிலைமாறு கால நீதிப்பொறி முறையை எம்மால் 2019 மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்கு முன்னர் ஸ்தாபிக்குமா என்பது சந்தேகத்திற்குரியது என்று ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஓ.எம்.பி என்ற காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு 20 மாதகாலம் கடந்தது தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள் நிகழாமை ஆகிய விடையங்களில் ஸ்ரீலங்காவிற்கு இருக்கும் அர்ப்பணிப்பும், விருப்பமும் அதேபோல் அதற்கான துணிவும் கடந்த ஒருவருடகாலமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தனது ஸ்ரீலங்கா அரசு பெருமிதம் வெளியிட்டது.

2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலக சடடம் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியினால் முறையாக ஸ்தாபிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்தார்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்கள் ஸ்ரீலங்காவிற்குள் அனுபவத்துவரும் தண்டனை முக்தியை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணமோ அதற்கான தேவையோ ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் பேரவையில் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கூற்றை ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை நீதி பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகழமை தொடர்பான விசேட பிரதிநிதி பெப்லோ டி கிறிசும் உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீலங்காவின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் கூடிய விசேட நீதிமன்ற பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறான பொறிமுறையொன்று இல்லாத நிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் கேட் கில்மோர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள அரச மற்றும் இராணு அதிகாரிகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா நீதிமன்றக் கட்டமைப்பு முறையாக செயற்படுவதில்லை என்று குற்றம்சாட்டியிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பொறிமுறை உள்ளிட்ட வேறு மார்க்கங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் விடுத்திருந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை சிறுபான்மையின சமூகமான முஸ்லீம்களுக்கு எதிராக கண்டி மாவட்டத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பிலும் ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஸ்ரீலங்காவின் ஏனைய இனங்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்துள்ளதை கண்டியில் முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் கவலை வெளியிட்ட ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, மனித உரிமைகள் பேரவையின் கூடடத் தொடர் ஆரம்பமாகும் போது ஸ்ரீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில ஈடுபடும் சில தரப்பினரே இந்த வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்களுடுன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் படைத்தரப்பினால் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகத்தினரை இலக்கு வைத்து நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அமைச்சர் திலக் மாரபன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு தவறியதை கடுமையாக விமர்சித்திருந்தன.

இந்த குற்றச்சாட்டுகளுக்க பதிலளித்த அமைச்சர் திலக் மாரபன, மீண்டும் ஒரு முறை அவ்வாறான நிலமை ஏற்படாது தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கு அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் புத்தி ஜீவிகள் வர்த்தக சமூகத்தினர் ஊடகங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் முழுமையான பங்களிப்புடன்கூடிய ஒத்துழைப்பை தமது அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − one =

*