;
Athirady Tamil News

நிர்வாக சேவையினை வழங்க வேண்டிய அரச நிறுவனம் ஆன்மீக சேவையை வழங்குவது நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்..!! (படங்கள்)

0

நிர்வாக சேவையினை வழங்க வேண்டிய அரச நிறுவனம் ஆன்மீக சேவையை வழங்குவது நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மன்றம் சுட்டிக்காட்டு

நிர்வாக சேவையினை வழங்க வேண்டிய அரச நிறுவனம் ஆன்மீக சேவையினை வழங்க முற்படுவது நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும் என வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மன்றம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுட்டிக்காட்டி கடிதமொன்றை கையளித்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமத கூடம் எனும் தொனிப்பொருளில் அமைக்கப்படவுள்ள வணக்கஸ்தலம் தொடர்பில் சமூக மட்டத்தில் உள்ள முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்தியம்பும் வகையில் குறித்த மன்றமானது இன்று வவுனியா அரசாங்க அதிபருக்கான கடிதமொன்றினை வழங்கியிருந்தது.

இன்று மதியம் வவுனியா மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமாரிடம் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதென சிவில் சமூகத்;தினரால் கருதப்படும் பின்வரும் விடயத்தைத் தங்களுக்கூடாக மாவட்ட அபிவிருத்திக் குழுவினதும், மாவட்ட சமூக நல்லிணக்கக் குழுவினதும் கவனத்திற்குக் கொண்டு வர இக் கடிதத்தை தங்களின் மேலான கவனத்திற்குச் சமர்ப்பிக்கின்றோம்.

பல்வேறு ஊடகங்களின் ஊடாகவும் சமூகப் பிரமுகர்கள் ஊடாகவும் வவுனியா மாவட்ட நிர்வாகம் மாவட்ட செயலகத்தில் சர்வமத பிரார்த்தனைக் கூடம் ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நாம் அறிகின்றோம்.

சமூக நல்லிணக்கத்திற்கு மத வழிபாடுகள் கூட்டு மதப் பிரார்த்தனைகள் இன்றியமையாதவை என்ற எண்ணக்கருவை மாவட்ட நிர்வாகம்; கொண்டிருப்பது சமூக நல்லிணக்க ஆர்வலர்கள் என்ற வகையில் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

ஆனால், நிர்வாக சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரச நிறுவனம் ஆன்மீக சேவைகளை வழங்க முற்படுவது சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.

ஏனெனில் மாவட்ட செயலகங்கள் நிர்வாக சேவைகளை வழங்குவதற்குரிய கட்டமைப்பைக் கொண்டனவையே ஒழிய ஆன்மீக சேவையை வழங்கும் கட்டமைப்பை கொண்டவையல்ல இதனால் மேற்படி கூட்டுப் பிரார்த்தனையை கண்காணிக்கும் தகுந்த பொறிமுறை இல்லாதிருப்பின் அது இக்கூடத்தைப் பயன்படுத்;தும் செயலகத்தில் சேவை வழங்கும் பணியாளர்கள் மத்தியிலும் செயலகத்தின் சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் பொதுமக்கள் மத்தியிலும் மதப் போட்டியினை ஏற்படுத்துவதற்குப் பெரும் வாய்ப்பு உண்டு.

ஏனெனில் இப் பணியாளர்களிலும் பொதுமக்களிலும் பெரும்பாலானோர் சமூக நல்லிணக்கம், கூட்டுப் பிரார்த்தனை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பான தெளிவான அறிவு, திறன், மனப்பாங்கு உடையவர்கள் அல்ல மாறாக மதக் குரோதங்களையும் எதிர்மனப்பாங்குகளையும் கொண்டவர்கள்.

ஒரு சர்வ மத பிரார்த்தனைக் கூடம் சர்வ மதங்களினதும் தனித்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய கட்டட வடிவமைப்பைப் பிரதி பலித்தல் வேண்டும்.

ஏனெனில் ஒவ்வொரு பொதுமகனும் பொதுப் பிரார்த்தனையில் ஈடுபடும் அதேவேளையில் தத்தமது மதத்தின் தனித்துவத்தைப் பேணிக் கொள்ளவும் உரித்துடையவர் ஆவார்.

ஒரு பொதுப் பிரார்த்தனைக் கூடத்தை எல்லா மதங்களையும் பிரதிபலிக்கக் தக்கதாக வடிவமைத்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது.

அது குறித்த ஒரு மதத்தை மட்டும் பிரதிபலிக்கக் கூடியதாக அமைந்து விட்டால் அது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவே முடியும்.

மதங்களின் தனித்துவத்திற்கு ஏற்ப எல்லா மதத்தினரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவர் என நாம் எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் ஏற்கனவே தமக்குத் தனியான பிரார்த்தனை மண்டபம் தேவையெனக் கேட்டிருப்பதாக நாம் அறிகின்றோம்.

எதிர்காலத்தில் ஏனைய மதத்தினரும் தத்தமக்குத் தனியான பிரார்த்தனை மண்டபங்கள் தேவையென போராட்டங்களை நடாத்துவார்களாக இருந்தால் அது மாவட்ட நிர்வாகத்திற்கு பெருத்த தலையிடியாக மாறும்.
நிர்வாக சேவைகளை வழங்குவதே மாவட்ட செயலகத்தின் நோக்கமாகும். ஆன்மீக சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு வணக்கஸ்தலங்களுக்கு உரியவையாகும்.

எனவே மாவட்ட செயலகம் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடின்றி அனைத்து பிரஜைகளுக்கும் தரமான சேவைகளை வழங்குவதன் மூலமாகவே சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியுமே ஒழிய அது வணக்கஸ்தலங்கள் செய்ய வேண்டிய ஆன்மீக சேவையை வழங்குவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

வவுனியா மாவட்ட செயலகம் கடந்த காலங்களிலிருந்து இன, மத, மொழி, பிரதேச வேறுபாடின்றி அனைத்து பிரஜைகளுக்கும் தரமான நிர்வாக சேவையை வழங்கி வருகின்றமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். எனவே அச் சேவை தொடர வேண்டுமென்பதையும் அது மேலும் மேம்படுத்தப்பட்டு சமூக நல்லிணக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதையும் நாம் விரும்புகின்றோம்.

மேலும் பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே மாவட்ட செயலகத்திற்கு வருகை தருகிறார்கள், பணியாளர்கள் சேவை வழங்குவதற்காகவே வருகை தருகிறார்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டு எவரும் வருகை தருவதில்லை.

அவ்வாறே தமக்குக் கிடைக்கும் நேரத்தில் பிரார்த்தனை செய்ய விரும்புபவர்களும் கூட அதனை மேற்கொள்ள மாவட்ட செயலகத்தின் சூழலில் நான்கு மதங்களினதும் வணக்கஸ்தலங்கள் மிகத் தாராளமாகவே காணப்படுகின்றன.

இந் நிலையில் மாவட்ட செயலகத்திற்கு தனியான பிரார்த்தனைக் கூடம் அவசியம் தானா என்ற வினா சிவில் சமூகத்தினர் மத்தியில் எழுவது இயல்பு.

மேற்படி பிரார்த்தனைக் கூடத்திற்கு மாவட்ட செயலகம் 2 மில்லியன் ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நாம் அறிகின்றோம். அதேவேளையில் நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் தேவையான பல கீழ்க்கட்டுமான வசதிகள் மாவட்ட செயலகத்தில் குறைவாகவே உள்ளன.

உதாரணமாக வருகை தரும் பொதுமக்களின் மிதி வண்டிகள், உந்துருளிகள் போன்ற வாகனங்களை நிறுத்துவதற்கு பொருத்தமான வாகனத் தரிப்பிடங்கள் இல்லாமை ஒரு நீண்டகாலக் குறைபாடாகும். பல திணைக்களங்களில் போதுமான இடவசதி இல்லாதிருப்பதை பொதுமக்களாகிய நாம் அவதானித்திருக்கின்றோம்.

பல அரச திணைக்களங்கள் மாவட்ட செயலக வளாகத்திற்குள் இடமின்மையினால் வேறு இடங்களில் இயங்கி வருவதையும் நீங்கள் அறிவீர்கள் எனவே இது போன்ற நிதிகளை நிர்வாக சேவைக்குத் தேவையான கீழ்க்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வி எமக்கு எழுகிறது.

மேற்கூறப்பட்ட காரணங்களை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு, வவுனியா மாவட்ட செயலகத்தில் கூட்டுப்பிரார்த்தனை மண்டபம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டத்தை மாவட்ட செயலகம் கைவிட வேண்டுமென மாவட்டத்தின் சிவில் சமூகத்தின் சார்பில் நாம் மிக்கத் தயவாகத் தங்களை வேண்டி நிற்கின்றோம் என அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − four =

*