வடகிழக்கு மாநிலங்களில் 21 பாராளுமன்றத் தொகுதிகளை குறிவைக்கும் அமித் ஷா..!!

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சியமைத்தது. அதன்பின்னர் பா.ஜ.க.வின் செல்வாக்கு பல்வேறு மாநிலங்களில் வலுவடைந்துள்ளது. இந்த உத்வேகத்துடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா வியூகம் வகுத்துள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தி வருகிறார். பூத் மட்ட அளவில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று பா.ஜ.க. பூத் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித் ஷா கலந்து கொண்டு, 2019 பொதுத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“2019 பொதுத் தேர்தலில் நான் ஒரு இலக்கு வைத்துள்ளேன். அதாவது, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 21-க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகள் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி வசம் உள்ளது. எனவே, நீங்கள் அனைவரும் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கடந்த தேர்தலில் நாம் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் உள்ள ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பொறுப்பாளர் என்ற அளவில் நியமித்து, வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் அமித் ஷா.