;
Athirady Tamil News

சசிகலாவுக்கு சலுகை அளிக்க லஞ்சம் – சிறை விவகாரத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா..!!

0

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணராவ் மீது டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி கர்நாடக உள்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

தற்போது ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறியதால்தான் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என்று தற்போது சிறைத்துறையில் இருந்த ஓய்வு பெற்ற டி.ஜி.பி சத்தியநாராயணராவ் கூறினார்.

இந்த நிலையில் டி.ஐ.ஜி.யாக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது கர்நாடக மாநில ஊர்க்காவல்படையில் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரூபா பி.பி.சி.க்கு பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் பிரபல வணிக சாலையான எம்.ஜி. சாலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா புர்கா அணிந்து கொண்டு உலாவியதாக எனக்கு தகவல் வந்தது. சசிகலாவும், இளவரசியும் வெளியே சென்றதை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அதனையும் தெரிவித்து இருப்பேன்.

சசிகலா விவகாரத்தை அம்பலப்படுத்திய பிறகு தமிழர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் என்னை பெரிதும் மதித்து வருகிறார்கள்.

சிறை தண்டனை பெற்றவர், அரசியல்வாதியாக இருப்பதால் மட்டுமே அவர் அரசியல் கைதியாகிவிடமாட்டார். சிறை ஆணைப்படியும், சிறை நிர்வாகத்தின் படியும், சசிகலா சிறப்பு சலுகைகள் எதையும் பெறமுடியாது. அரசியல் கைதிகளுக்கு சில சலுகைகள் உண்டு.

சிறப்பு சலுகைகள் பெறுவதாக நான் அறிக்கை கொடுத்த பெண்ணான சசிகலா ஒரு அரசியல் கைதி அல்ல. அவர் அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர். எனவே அவர் சாதாரண சிறைக்கைதி போலத்தான் நடத்தப்படுவார்.

சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து நான் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளேன். இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமாரும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சசிகலா சிறையைவிட்டு வெளியே சென்றது பற்றி எந்த தடயமும் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கு கிடைத்த தகவல்களை விசாரணைக்காக சமர்ப்பித்து உள்ளேன்.

எனக்கு கிடைத்த காணொளி பதிவு ஒன்றில் சசிகலாவும், இளவரசியும் பட்டு சேலைகள் உடுத்திக் கொண்டு பொருட்கள் வாங்கிய கையோடு சிறைக்கு வருவது தெரிகிறது. எனவே அவர்கள் வெளியே சென்று வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எனது அறிக்கையில் தெரிவித்து இருந்தேன்.

தொழிற்சங்கத் தலைவர் முத்துமாணிக்கம் என்பவர் என்னிடம் வந்து சசிகலா, இளவரசி இருவரையும் புர்காவோடு எம்.ஜி.சாலையில் பார்த்ததாக கூறினார். அந்த தகவலை அவர் என்னிடம் எழுத்து பூர்வமாகவும் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் சசிகலா, இளவரசி ஆகிய 2 பேரும் சிறையை விட்டு வெளியே சென்றதை நான் பார்க்கவில்லை. அப்படி பார்த்திருந்தால், அதனையும் எனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பேன்.

சிறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு பாகுபாடு இல்லாத சமத்துவம் பேணப்பட்டு, ஊழல் முற்றிலும் களையப்பட வேண்டும். எனவே சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய அறிக்கையே சிறை சீர்திருத்தத்திற்கு தொடக்க புள்ளியாகும். இதற்காக நான் பெருமளவு ரிஸ்க் எடுத்தேன்.

இதனால் பணியிட மாற்றம், விசாரணை, மெமோ, மூத்த அதிகாரி என் மீது வழக்கு என்று பல வி‌ஷயங்களை சந்தித்து வருகிறேன். சசிகலா கும்பல், என்னை சும்மா விடமாட்டார்கள் என்று சிலர் கூறியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறை நிர்வாகத்தில் உள்ள பிழையை வெளிக்கொண்டு வருவது, அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதால் சிறை விவகாரத்தில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

கடந்த 18 ஆண்டுகளில் 41 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளேன். சசிகலா விவகாரத்திற்கு பின் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டேன். தற்போது ஊர்க்காவல் படையில் ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 11 =

*